போலீசார்-அங்கன்வாடி ஊழியர்களுக்கு சம்பள உயர்வு மதுபானங்களுக்கு கூடுதல் வரி கர்நாடக பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள்

2019-20-ம் ஆண்டுக்கான கர்நாடக அரசு பட்ஜெட்டை முதல்-மந்திரி குமாரசாமி நேற்று தாக்கல் செய்தார்.

Update: 2019-02-08 23:15 GMT
பெங்களூரு,

மைசூரு, மங்களூரு மற்றும் உப்பள்ளியில் மெட்ரோ ரெயில் சேவை, போலீசார், அங்கன்வாடி ஊழியர்களுக்கு சம்பள உயர்வு, மதுபானங்களுக்கு கூடுதல் வரி என்பது உள்பட புதிய அறிவிப்புகள் அதில் இடம்பெற்று உள்ளன.

கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி அரசு உள்ளது.
முதல்-மந்திரியாக குமாரசாமி உள்ளார். இந்த நிலையில் ஏற்கனவே அறிவித்தப்படி கர்நாடக பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 6-ந் தேதி பெங்களூரு விதான சவுதாவில் தொடங்கியது. முதல் நாள் கூட்டத்தில் கவர்னர் வஜூபாய் வாலா கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்போது, பா.ஜனதா உறுப்பினர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர். இதனால் கவர்னர் தனது உரையை பாதியிலேயே முடித்துவிட்டு சென்றார். கூட்டணி அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டது, முதல்-மந்திரி குமாரசாமி பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி நேற்று முன்தினமும் பா.ஜனதா உறுப்பினர்கள் சட்டசபையை முடக்கினர்.

இதனால் 8-ந் தேதி (அதாவது நேற்று) திட்டமிட்டப்படி குமாரசாமி பட்ெஜட் தாக்கல் செய்வாரா? என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இத்தகைய பரபரப்பான சூழ்நிலையில் கர்நாடக சட்டசபை நேற்று காலை 12.30 மணிக்கு பெங்களூரு விதான சவுதாவில் கூடியது. முதல்-மந்திரி குமாரசாமி, 2019-20-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) தாக்கல் செய்து பேசத்தொடங்கினார்.

அப்போது. பா.ஜனதா உறுப்பினர்கள் எழுந்து நின்று, முதல்-மந்திரி பேசத்தொடங்கியவுடன் பட்ஜெட் புத்தகத்தை உறுப்பினர்களுக்கு உடனே வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இது குறித்து பேச அனுமதிக்குமாறு சபாநாயகரிடம் எடியூரப்பா கோரிக்கை விடுத்தார். இதை சபாநாயகர் கண்டுகொள்ளவில்லை.

இதனால் பா.ஜனதா உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இந்த அமளிக்கு இடையே குமாரசாமி பட்ஜெட் புத்தகத்தை வாசித்துக் கொண்டிருந்தார். பா.ஜனதா உறுப்பினர்கள் சிறிது நேரம் கோஷங்களை எழுப்பினர்.

பதிலுக்கு ஆளுங்கட்சி உறுப்பினர்கள் கைகளில் பதாகைகளை எடுத்துக்காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சபையில் கூச்சல்-குழப்பம் நீடித்தது. சுமார் 10 நிமிடங்களுக்கு பிறகு பா.ஜனதா உறுப்பினர்கள் பட்ஜெட்டை புறக்கணித்துவிட்டு வெளிநடப்பு செய்தனர்.

அதைத்தொடா்ந்து எதிர்க்கட்சி வரிசை இருக்கைகள் அனைத்தும் காலியாக இருந்தன. ஆளுங்கட்சி வரிசையில் பெரும்பாலான உறுப்பினர்கள் இருக்கையில் அமர்ந்திருந்தனர். குமாரசாமி தொடர்ந்து பட்ஜெட்டை வாசித்தார். 12.35 மணிக்கு பட்ஜெட்டை வாசிக்க தொடங்கிய குமாரசாமி, மதியம் 3.40 மணிக்கு உரையை நிறைவு செய்தார். சுமார் 3 மணி நேரம் எந்த இடைவெளியும் இல்லாமல் பட்ஜெட் புத்தகத்தை அவர் வாசித்து முடித்தார்.

பட்ஜெட்டின் மொத்த மதிப்பீடு ரூ.2 லட்சத்து 34 ஆயிரத்து 153 கோடி ஆகும். இந்த பட்ஜெட்டில் பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக விவசாயத்துறைக்கு அதிக திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இஸ்ரேல் மாதிரி விவசாய முறையை அமல்படுத்த ரூ.145 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கன்வாடி ஊழியர்கள், ஆஷா மருத்துவ ஊழியர்களின் சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது.

முதல் மந்திரியின் சொட்டுநீர் பாசன திட்டத்திற்கு மானியம் வழங்க ரூ.368 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலை மனதில் கொண்டு புதிய வரிகள் எதுவும் விதிக்கப்படவில்லை. மதுபான வகையான பீர் மீதான வரி உயர்த்தப்பட்டுள்ளதால் அவற்றின் விலை உயருகிறது. மடங்களுக்கு ரூ.60 கோடி நிதி உதவி அறிவிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* பீா், குறைந்த ஆல்கஹால் கலப்படம் செய்யப்பட்ட மதுபானங்கள் மீது கலால் வரி உயர்த்தப்படுகிறது. கலால் துறை மூலம் வருகிற ஆண்டில் ரூ.20 ஆயிரத்து 950 கோடி வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

பறக்கும் கேமராக்கள்


* கூட்டுறவு மற்றும் தேசிய வங்கிகளின் விவசாய கடன் தள்ளுபடிக்கு ரூ.12 ஆயிரத்து 650 கோடி நிதி ஒதுக்கப்படும்.

* விவசாயத்துறைக்கு மொத்தம் ரூ.46 ஆயிரத்து 853 கோடி நிதி ஒதுக்கப்படும்.

* குற்றங்களை தடுக்க பறக்கும் கேமராக்கள் மூலம் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளும் திட்டம் அமல்படுத்தப்படும்.

* பெங்களூருவில் அடுக்குமாடி கட்டிடங்களில் தீவிபத்து ஏற்பட்டால் அதை நிர்வகிக்க 90 மீட்டர் உயரத்துடன் கூடிய ஏணி உள்ள தீயணைப்பு வாகனம் கொள்முதல் செய்யப்படும்.

* போலீசாருக்கு பணி இடர்ப்பாட்டு படி ரூ.1,000-ல் இருந்து ரூ.2 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது.

* புதிதாக 3,544 பஸ்கள் கொள்முதல் செய்யப்படும். 44 பஸ் நிலையங்கள் கட்டப்படும். 10 பஸ் பணிமனைகள் அமைக்கப்படும்.

கலந்தாய்வு முறை

* மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட ரூ.5 கோடி ஒதுக்கப்படும்.

* அரசுத்துறையில் சி மற்றும் டி பிரிவு ஊழியர்கள் பணி இடமாற்றத்தில் வெளிப்படைத்தன்மையை கடைப்பிடிக்க கலந்தாய்வு முறை அமல்படுத்தப்படும். இதற்காக ஒரு சட்டம் இயற்றப்படும்.

* பால் உற்பத்தியாளர்களுக்கு ஒரு லிட்டருக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை 5 ரூபாயில் இருந்து 6 ரூபாயாக உயர்த்தப்படும்.

* பாதாமியை உலக புகழ் பெற்ற சுற்றுலா தலமாக மாற்ற ரூ.25 கோடி நிதி ஒதுக்கப்படும்.

* மைசூருவில் சுற்றுலா தலங்களை பார்க்க வசதியாக லண்டன் மாதிரியில் 6 இரட்டை அடுக்கு பஸ்கள் கொள்முதல் செய்யப்படும்.

தையல் எந்திரம்


* இந்தியாவில் முதல் முறையாக கனிம உரிமங்களை ஆய்வு செய்ய நவீன தொழில்நுட்ப வசதி கொண்ட பறக்கும் கேமராக்களை பயன்படுத்த ரூ.85 கோடி நிதி ஒதுக்கப்படும்.

* சென்னை-பெங்களூரு தொழில் வழிச்சாலை திட்டத்தில் துமகூருவில் 9,629 ஏக்கர் நிலத்தில் தொழிற்பேட்டை அமைக்கப்படும். இதில் ரூ.50 ஆயிரம் கோடிக்கு முதலீடு கிடைக்கும். 2 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகும்.

* 2-ம் நிலை, 3-ம் நிலை நகரங்களில் தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் புதிய தொழில் கொள்கை உருவாக்கப்படும்.

* அடுத்த ஆண்டு (2020) ஜனவரி மாதம் பெங்களூருவில் உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தப்படும்.

* 50 சதவீத மானியத்தில் தையல் பயிற்சி பெற்ற பெண்களுக்கு தையல் எந்திரம் வழங்கப்படும்.

4 புதிய தாலுகாக்கள்


* மண்டியாவில் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு ரூ.50 கோடி நிதி ஒதுக்கப்படும்.

* கலபுரகி விமான நிலையத்தில் விமான போக்குவரத்து நடைபெற நடவடிக்கை எடுக்கப்படும்.

* கர்நாடகத்தில் ரூ.10 ஆயிரம் கோடியில் 7,940 கிலோ மீட்டர் நீளத்திற்கு சாலைகள் மேம்படுத்தப்படும்.

* மானச சரோவர் யாத்திரைக்கு செல்லும் பக்தர்களுக்கு வழங்கப்படும் மானியம் ரூ.30 ஆயிரமாக உயர்த்தப்படும்.

* ராமநகர் மாவட்டத்தில் ஹாரோஹள்ளி, பாகல்கோட்டை மாவட்டத்தில் தேரதால், சிக்பள்ளாப்பூர் மாவட்டத்தில் சேலூர், சிக்கமகளூரு மாவட்டத்தில் கலசா ஆகிய 4 புதிய தாலுகாக்கள் உருவாக்கப்படும்.

காவிரி நீர் திட்டம்

* அர்க்காவதி, தட்சிண பினாகினி ஆகிய நதிகளின் நீர் ஆதாரத்தை பயன்படுத்தி பெங்களூரு நகரின் குடிநீர் தேவை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இந்த திட்டத்தால் 1,400 மில்லியன் லிட்டர் நீர் பெங்களூருவுக்கு தினமும் கிடைக்கும்.

* பெங்களூரு நகரின் எதிர்கால நீர் தேவையை சமாளிக்கும் நோக்கத்தில் 5-வது கட்ட காவிரி நீர் திட்டம் ரூ.5,500 கோடி செலவில் அமல்படுத்தப்படும்.

* பெங்களூருவில் ரூ.17 ஆயிரத்து 20 கோடியில் வெளிவட்டச்சாலை அமைக்கப்படுகிறது. இந்த திட்டத்திற்கு பட்ஜெட்டில் ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கப்படும்.

* ெகங்கேரி மேற்கு பகுதியில் உள்ள பாதையை விரிவாக்கம் செய்யவும், சல்லகட்டாவில் கூடுதல் மெட்ரோ நிலையம் ஒன்றை கட்டவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மெட்ரோ ரெயில் சேவை


* ரூ.16 ஆயிரத்து 579 கோடி செலவில் பெங்களூரு சில்க்போர்டு சந்திப்பில் இருந்து கே.ஆர்.புரம், ஹெப்பால் வழியாக விமான நிலையத்திற்கு மெட்ரோ ரெயில் பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

* அனைத்து மெட்ரோ ரெயில்களிலும் 6 பெட்டிகள் இணைக்கப்படும்.

* பி.எம்.டி.சி. மற்றும் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்ய ஒரே பயண அட்டை அறிமுகம் செய்யப்படும்.

* மைசூரு, மங்களூரு, உப்பள்ளி-தார்வாரில் மெட்ரோ ரெயில் சேவையை ஏற்படுத்துவது குறித்து ஆய்வு செய்யப்படும்.

* ரூ.23 ஆயிரத்து 93 கோடி செலவில் புறநகர் ரெயில் திட்டம் அமல்படுத்தப்படும். இதற்காக மத்திய-மாநில அரசு நிர்வாகத்தின் கீழ் பெங்களூரு ரெயில் கட்டமைப்பு வளர்ச்சி நிறுவனம் தொடங்கப்படும்.

* பெங்களூரு நகரில் புதிய வாகன நிறுத்த கொள்கை அமல்படுத்தப்படும். 87 சாலைகளில் 10 ஆயிரம் வாகனங்களை நிறுத்த வசதி ஏற்படுத்தப்படும்.

குழு காப்பீட்டு திட்டம்

* ரூ.8,015 கோடியில் அமல்படுத்தப்பட உள்ள புதிய பெங்களூரு திட்டத்திற்கு பட்ஜெட்டில் ரூ.2,300 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது.

* பெங்களூருவில் 5 லட்சம் தெருவிளக்குகள், எல்.இ.டி. தெருவிளக்குகளாக மாற்றப்படும்.

* எம்.எல்.ஏ.க்களின் தொகுதி வளா்ச்சி நிதிக்கு ரூ.600 கோடி நிதி ஒதுக்கப்படும்.

* ஆட்டோ, வாடகை கார் ஓட்டுனர்களுக்கு குழு காப்பீட்டு திட்டம் அமல்படுத்தப்படும். ஆட்டோக்கள், மின்சார ஆட்டோக்களாக மாற்றப்படும். இதற்காக ரூ.30 கோடி நிதி ஒதுக்கப்படும்.

* பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்களின் ஓய்வூதியம் ரூ.2,000 ஆக உயர்த்தப்படும்.

* ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் மேம்பாட்டிற்கு ரூ.30 ஆயிரத்து 445 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது.

அங்கன்வாடி ஊழியர்கள்

* அங்கன்வாடி ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தில் ரூ.500, உதவியாளர்களுக்கு ரூ.250 உயர்த்தப்படும். இதற்காக ரூ.60 கோடி நிதி ஒதுக்கப்படும். இது வருகிற நவம்பர் மாதம் 1-ந் தேதி முதல் அமலுக்கு வரும்.

* ஆஷா மருத்துவ ஊழியர்களுக்கு ரூ.500 சம்பள உயர்வு வழங்கப்படும். இது நவம்பர் மாதம் 1-ந் தேதி முதல் அமலுக்கு வரும்.

மேற்கண்டவை உள்பட பல்வேறு அம்சங்கள் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன.

மேலும் செய்திகள்