வெவ்வேறு விபத்துகளில் நகராட்சி முன்னாள் உறுப்பினரின் கணவர் உள்பட 3 பேர் பலி

வெவ்வேறு விபத்துகளில் நகராட்சி முன்னாள் உறுப்பினரின் கணவர் உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.

Update: 2019-02-08 22:15 GMT
கரூர், 

கரூர் தெற்கு முருகநாதபுரத்தை சேர்ந்தவர் செல்வராஜ்(வயது 55). இவர், தனது மனைவி சரோஜா மற்றும் மகளுடன் காரில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியே சென்றார். பின்னர் அவர்கள் காரில் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். காரை செல்வராஜ் ஓட்டினார். வெண்ணெய்மலை வழியாக வாங்கபாளையம் சோதனைச்சாவடி அருகே வந்தபோது, திடீரென ஒரு மோட்டார் சைக்கிள் குறுக்கே வந்ததாக தெரிகிறது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி, சாலையோரமாக உள்ள கோவில் சுவர் மீது பயங்கரமாக மோதியது. இதில் செல்வராஜ் படுகாயம் அடைந்தார். காரில் பின்னால் அமர்ந்திருந்த சரோஜா மற்றும் அவருடைய மகள் ஆகியோர் காயமின்றி தப்பினர்.

அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் அங்கு ஓடி வந்து செல்வராஜை மீட்டு சிகிச்சைக்காக கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி செல்வராஜ் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து வெங்கமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிச்சையன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். சரோஜா, கரூர் நகராட்சி முன்னாள் உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் கிருஷ்ணராயபுரம் வட்டம் மணவாசியை சேர்ந்தவர் சந்தானம் மனைவி தங்காயி(54). இவர் நேற்று மதியம் ஆட்டுக்கு புல் அறுத்துக்கொண்டு கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மணவாசி சுங்கச்சாவடி பகுதியில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக திருச்சி நோக்கி சென்ற கார் எதிர்பாராதவிதமாக தங்காயி மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த தங்காயி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இது குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மாயனூர் போலீசார், தங்காயியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடவூர் அருகே உள்ள தெற்கு அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் பழனியப்பன்(55). தொழிலாளியான இவர், தனது மோட்டார் சைக்கிளில் புன்னம்சத்திரம் அருகே பஞ்சயங்குட்டை நடுப்பாளையம் செல்லும் சாலையில் சென்றார். அங்குள்ள கிரஷர் அருகே சென்றபோது பின்னால் வேகமாக வந்த லாரி, பழனியப்பன் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த வேலாயுதம்பாளையம் போலீசார் அங்கு வந்து, பழனியப்பன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்ராஜ் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் நல்லையனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்