யானைகளை விரட்ட வலியுறுத்தி வனத்துறை அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம்

யானைகளை விரட்ட வலியுறுத்தி ராயக்கோட்டை வனத்துறை அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்துவது என்று தமிழக விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2019-02-08 22:00 GMT
ராயக்கோட்டை, 

தமிழக விவசாயிகள் சங்கத்தின் நிறுவன தலைவர் நாராயணசாமி நாயுடுவின் 94-ம் ஆண்டு பிறந்த நாள் மற்றும் அலேசீபம் கிளை சங்க தொடக்க விழா கூட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட துணை தலைவர் சந்திரசேகர் தலைமை தாங்கினார். கிளை மூத்த தலைவர் வெங்கடேஷ் முன்னிலை வகித்தார்.

இதில் சங்க தலைவர் நாகராஜ், நிர்வாகிகள், தாசப்பா, சங்கரமூர்த்தி, தணிகாசலம், ரவி, கோவிந்தசாமி, சின்னசாமி, நாகராஜ் ஆகியோர் பேசினார்கள். நிகழ்ச்சியில் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் கே.எம்.ராமகவுண்டர் கலந்து கொண்டு சங்க கொடியை ஏற்றி வைத்து பேசினார்.

கூட்டத்தில் நாராயணசாமி நாயுடுவிற்கு மணிமண்டபம் கட்ட வேண்டும். தென்பெண்ணை ஆற்று தண்ணீரை மாவட்டத்தில் உள்ள ஏரிகளுக்கு கால்வாய் வெட்டி நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளுக்கும், கால்நடைகளுக்கும், பயிர்களுக்கும் இலவச இன்சூரன்ஸ் திட்டம் கொண்டு வர வேண்டும்.

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, விவசாயிகளுக்கு ஓய்வூதியம் கொடுப்பேன் என்றும், விவசாய கடன் தள்ளுபடி செய்வதாக கூறியதை தமிழக விவசாயிகள் சங்கம் வரவேற்கிறது. பயிர்களையும், விவசாயத்தையும் அழிக்கும் விலங்குகளை அரசு சுட அனுமதிக்க வேண்டும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அட்டகாசம் செய்து வரும் யானைகளை கர்நாடகாவிற்கு விரட்டிட வேண்டும்.

ஆழியாளம், வாணிஒட்டு, உலகம் பகுதியில் அணை கட்ட வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 2-வது வாரத்தில் ராயக்கோட்டை வனத்துறை அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதில் நிர்வாகிகள் சுப்பிரமணியரெட்டி, நசீர் அகமது, பெருமா, மணிமேகலை, கோவிந்தராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்