ஆசிரியையிடம் நகைபறித்த கொள்ளையர்கள் 2 பேர் சிறையில் அடைப்பு மேலும் ஒருவருக்கு போலீஸ் வலைவீச்சு

நாமக்கல்லில் தனியார் பள்ளி ஆசிரியையிடம் நகைபறித்த வழக்கில் சிக்கிய 2 கொள்ளையர்கள் சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் ஒருவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2019-02-08 22:15 GMT
நாமக்கல், 

நாமக்கல் அண்ணா நகரை சேர்ந்தவர் சசிகலா (வயது 40). தனியார் பள்ளி ஆசிரியை. கடந்த 6-ந் தேதி மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் சசிகலா கழுத்தில் அணிந்து இருந்த 1½ பவுன் நகைகளை பறித்து கொண்டு தப்பிஓட முயன்றனர். இதைதொடர்ந்து சசிகலா கூச்சல் போடவே, அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து, கொள்ளையர்களில் இருவரை சுற்றிவளைத்து பிடித்தனர். பின்னர் தர்மஅடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற அவர்களிடம் நாமக்கல் போலீசார் நடத்திய விசாரணையில் அவர்களில் ஒருவர் பெரம்பலூரை சேர்ந்த தமிழ்மணி (30) என்பதும், மற்றொருவர் திருச்சி மாவட்டம் தாத்தையங்கார்பேட்டையை சேர்ந்த எம்.சி.ஏ. பட்டதாரி மனோஜ்குமார் (31) என்பதும் தெரியவந்தது. இவர்கள் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் சமீபத்தில் சிறையில் இருந்து வெளியே வந்த இந்த கொள்ளையர்கள் மீண்டும் கைவரிசை காட்டி இருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார் நாமக்கல் முதலாவது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட்டு தனபால் அவர்கள் இருவரையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து இருவரும் சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய தாத்தையங்கார்பேட்டையை சேர்ந்த சுதாகர் என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்