மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள்
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்தப்பட்டு உள்ளதாக தேர்தல் பயிற்சி வகுப்பில் அதிகாரி தெரிவித்தார்.
தேனி,
நாடாளுமன்ற பொதுத்தேர்தல் விரைவில் நடக்க உள்ளது. அதை முன்னிட்டு தேர்தல் முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வருகிற தேர்தலில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் எந்திரம் பயன்படுத்தப்பட உள்ளது. இதுதொடர்பாக தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கும், வாக்களிக்கும் பொதுமக்களுக்கும் முன்கூட்டியே பயிற்சி, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. அதன்படி மாவட்ட அளவில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
தேனி மாவட்ட அளவில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவி, யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் கருவி ஆகியவை தொடர்பாக செயல்விளக்க பயிற்சி வகுப்பு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. பயிற்சியை மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் தொடங்கி வைத்து பேசினார்.
இதில் மதுரை மாநகராட்சி துணை ஆணையர் மணிவண்ணன் கலந்துகொண்டு பயிற்சி அளித்தார். பயிற்சியின்போது அவர் கூறியதாவது:-
கடந்த தேர்தல்களில் பயன்படுத்திய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகளை காட்டிலும் தற்போது மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள் பயன்படுத்தப்பட உள்ளன. சோதனை முயற்சியாக அறிமுகம் செய்யப்பட்ட யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் எந்திரமும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பயன்படுத்தப்பட உள்ளது. வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள் தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்தப்பட்டு உள்ளன.
கடந்த தேர்தல்களின்போது மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை கட்டுப்பாட்டு கருவியுடன் இணைத்து பயன்படுத்தினோம். வருகிற தேர்தலில் கட்டுப்பாட்டு கருவியை யாருக்கு வாக்களித்தோம் என்பதை காட்டும் எந்திரத்துடன் இணைத்து, அந்த எந்திரத்துடன் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை இணைக்க வேண்டும்.
முன்பு ஒரு வாக்கை பதிவு செய்ய 15 வினாடிகள் ஆகும். தற்போது 12 வினாடிகளில் ஒரு வாக்கை பதிவு செய்யலாம். வாக்குப்பதிவு செய்த பின்பு 7 வினாடிகளில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை நவீன எந்திரத்தில் உள்ள சிறிய திரையில் காணலாம். 7 வினாடிகளுக்கு பிறகு வாக்களித்தது தொடர்பான ரசீது தானாக துண்டிக்கப்பட்டு தனி பெட்டிக்குள் விழுந்துவிடும்.
இந்த எந்திரத்தில் பழுது ஏதேனும் ஏற்பட்டால் உடனே தேர்தல் நடத்தும் அலுவலருக்கு தகவல் கொடுக்க வேண்டும். அதுவரை வாக்குப்பதிவை நிறுத்தி வைக்க வேண்டும். மாற்று எந்திரங்கள் வந்தபிறகு தொடர்ந்து வாக்குப்பதிவை நடத்த வேண்டும். வாக்களித்தவர்கள் யாராவது யாருக்கு வாக்களித்தோம் என்பதை காட்டும் எந்திரம் சரியாக செயல்படவில்லை என்றோ, தவறான தகவலை காட்டுவதாகவோ புகார் செய்தால் அவர்களின் புகாரை வாக்குச்சாவடி அலுவலர்கள் கேட்க வேண்டும்.
வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பப்படும் வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவியை சுற்றி இளஞ்சிவப்பு நிறத்தில் ஒரு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருக்கும். அவை நல்ல முறையில் இயங்குகின்றன என்பதை உறுதி செய்த பின்னரே அந்த ஸ்டிக்கர் ஒட்டப்படும். எனவே, இந்த ஸ்டிக்கர் இல்லாமல் வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள் வந்தால் அதை பயன்படுத்தக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த பயிற்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கந்தசாமி, பெரியகுளம் ஆர்.டி.ஓ. ஜெயப்பிரிதா மற்றும் தாசில்தார்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர் கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.