திருச்சி அருகே தொட்டிலில் தூங்கிய குழந்தை கடத்தல் போலீசார் விசாரணை
திருச்சி அருகே தொட்டிலில் தூங்கிய குழந்தையை மர்ம நபர்கள் கடத்தி சென்றனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவெறும்பூர்,
திருச்சியை அடுத்த திருவெறும்பூர் வள்ளுவர் நகரை சேர்ந்தவர் ராமச்சந்திரன். கழிவுநீர் அகற்றும் லாரி டிரைவராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி சத்யா. இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இதில் 3-வது பெண் குழந்தை லத்திகா, பிறந்து 3 மாதமே ஆகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ராமச்சந்திரன் வேலைக்கு சென்றுவிட்டார்.
சத்யா, லத்திகாவை தொட்டிலில் படுக்க வைத்துவிட்டு, மற்ற 2 குழந்தைகளுடன் தூங்கி விட்டார். நேற்று அதிகாலை 3 மணியளவில் குழந்தை லத்திகா அழும் சத்தம் கேட்டு எழுந்த சத்யா, குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தார். பின்னர் குழந்தையை தொட்டிலில் தூங்க வைத்துவிட்டு, அவர் தூங்கினார்.
இந்நிலையில் அதிகாலை 4 மணியளவில் ராமச்சந்திரன் வீட்டிற்கு வந்தார். அவர் குழந்தையை பற்றி சத்யாவிடம் கேட்டபோது, தொட்டிலில் தூங்குவதாக கூறினார். ஆனால் அவர்கள் தொட்டிலில் பார்த்தபோது, குழந்தையை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த இருவரும், உறவினர்கள் யாரேனும் குழந்தையை தூக்கி சென்றிருக்கலாம் என்று எண்ணி, அப்பகுதியில் உள்ள உறவினர்களின் வீடுகளுக்கு சென்று அவர்களிடம் கேட்டனர். ஆனால் அவர்கள் குழந்தையை தூக்கி வரவில்லை என்று கூறிவிட்டனர்.
இதனால் ராமச்சந்திரனும், சத்யாவும் பல்வேறு இடங்களில் குழந்தையை தேடினர். ஆனால் குழந்தை லத்திகாவை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து ராமச்சந்திரன் திருவெறும்பூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் அமுதாராணி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். நேற்று அதிகாலை சத்யா குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துவிட்டு தூங்கியதும், நைசாக வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள், தொட்டிலில் இருந்து குழந்தையை தூக்கி கடத்தி சென்றது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. குழந்தையை கடத்தி சென்ற மர்ம நபர்கள் யார், எதற்காக குழந்தையை கடத்தி சென்றார்கள்? என்பது பற்றிய விவரம் உடனடியாக தெரியவில்லை.
அவர்கள் குழந்தை கடத்தல் கும்பலை சேர்ந்தவர்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டில் தொட்டிலில் தூங்கிய 3 மாத குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் திருவெறும்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.