வினாத்தாள் தயாரிக்கும் முறையை மாற்றியதை கண்டித்து அரசு பள்ளி மாணவிகள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு

வினாத்தாள் தயாரிக்கும் முறையை மாற்றியதை கண்டித்து புதுக்கோட்டையில் அரசு பள்ளி மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2019-02-08 22:30 GMT
புதுக்கோட்டை, 

தமிழகத்தில் பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வு எழுதுபவர்களுக்கு கடந்த ஒரு மாதத்தில் வினாத்தாள் தயாரிக்கும் முறையை 3 தடவை மாற்றப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் புதுக்கோட்டையில் உள்ள ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவிகள் நேற்று வகுப்புகள் முடிந்தவுடன் ஒரே மாதத்தில் வினாத்தாள் தயாரிக்கும் முறை 3 தடவை மாற்றப்பட்டதை கண்டித்தும், பழைய வினாத்தாள் தயாரிக்கும் முறையில் அரசு பொதுத்தேர்வு வினாத்தாள்கள் தயாரிக்க வேண்டும் எனக்கூறி புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் திருச்சி செல்லும் சாலையில் ராணியார் அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளியின் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட மாணவிகள் வினாத்தாள் தயாரிக்கும் முறைகளை மாற்றியதை கண்டித்து கோஷங் களை எழுப்பினர்.

இதையடுத்து பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் புதுக்கோட்டை டவுன் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மாணவிகள் சாலை மறியலை கைவிட மறுத்து, கலெக்டர் கணேஷ் வந்து பேச்சுவார்த்தை நடத்தினால் தான் மறியலை கைவிடுவோம் எனக்கூறி தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து போலீசார் போக்குவரத்தை மாற்று பாதையில் திருப்பி விட்டனர். இதையடுத்து மாவட்ட கல்வி அதிகாரி அண்ணாமலை ரெஞ்சன், போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து மறியலில் ஈடுபட்ட மாணவிகள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் புதுக்கோட்டை-திருச்சி சாலையில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்