குடியாத்தம் அருகே வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தேர்தலில் தள்ளுமுள்ளு

குடியாத்தம் அருகே செம்பேடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தேர்தலில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-02-08 23:00 GMT

குடியாத்தம், 

குடியாத்தம் அருகே செம்பேடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு கடந்த ஆண்டு தேர்தல் நடைபெற்றது. இதில் 11 பேர் நிர்வாக குழுவிற்கு தேர்வு செய்யப்பட்டனர். கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் நிர்வாக குழுவிற்கு தலைவர் மற்றும் துணைத்தலைவர் தேர்தல் அறிவிக்கப்பட்டது. தேர்தல் நாளன்று கூச்சல், குழப்பத்தால் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து நேற்று தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் அ.தி.மு.க மற்றும் தி.மு.க.வினருக்கு இடையே கடும் போட்டி நிலவியது.

தேர்தலையொட்டி ஆம்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சச்சிதானந்தம் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் செங்குட்டுவன், இருதயராஜ், சப்-இன்ஸ்பெக்டர்கள் சிவக்குமார், சிலம்பரசன், சரவணன் உள்ளிட்ட போலீசார் அசம்பாவிதம் நடைபெறாவண்ணம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தேர்தலையொட்டி காலை முதலே செம்பேடு கடன் சங்கத்தின் அருகே அ.தி.மு.க., தி.மு.க., அ.ம.மு.க. உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த ஏராளமானோர் திரண்டிருந்தனர். அப்போது ஒரு தரப்பை சேர்ந்தவர்கள் தேர்தல் நடைபெற்று வந்த கடன் சங்கத்திற்குள் நுழைய முற்பட்டனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

அப்போது இருதரப்பினருக்கும் மற்றும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து போலீசார் அவர்களை தடியடி நடத்துவதுபோல் லத்திகளை சுழற்றி அப்புறப்படுத்தினர்.

தொடர்ந்து பலத்த பாதுகாப்புடன் நடைபெற்ற தேர்தலில் தலைவராக அ.தி.மு.க.வை சேர்ந்த எம்.ஜலேந்திரன், துணைத்தலைவராக அ.தி.மு.க.வை சேர்ந்த டி.ஜெ.ஜெயப்பிரகாஷ் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

வெற்றி பெற்றவர்களுக்கு தேர்தல் அலுவலரும், கூட்டுறவு சார்பதிவாளருமான எம்.சந்திரன், வங்கி செயலாளர்கள் குணவதி, யுவராஜ் ஆகியோர் சான்றிதழ்களை வழங்கினர். மேலும் அவர்களுக்கு அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் வி.ராமு தலைமையில் அ.தி.மு.க.வினர் வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்