வனப்பகுதியில் யானையை துப்பாக்கியால் சுட்டுக்கொன்று 2 தந்தங்கள் கடத்தல்

கொள்ளேகால் அருகே வனப்பகுதியில் யானையை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று 2 தந்தங்களை கடத்தி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2019-02-07 23:14 GMT
கொள்ளேகால்,

சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகால் தாலுகா காவேரி வனப்பகுதிக்குட்பட்ட கொத்தனூர் கிராமத்தில் வனத்துறையினரின் முகாம் அமைந்துள்ளது. இந்த முகாமில் வனக்காவலர்கள் தங்கியிருந்து வனப்பகுதியில் சோதனையிட்டு வருகின்றனர். இந்த நிலையில் கொத்தனூர் அருகே சிக்கலூர் வனப்பகுதியில் நேற்று முன்தினம் வனக்காவலர்கள் ரோந்து சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அந்தப்பகுதியில் பயங்கர துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகமடைந்த வனத்துறையினர் துர்நாற்றம் வந்த திசையை நோக்கி சென்று பார்த்தனர். அப்போது, அந்தப்பகுதியில் அழுகிய நிலையில் ஒரு யானை செத்து கிடந்தது. இதனை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே இதுபற்றி வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு வனக்காவலர்கள் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் காவேரி வனப்பகுதி அதிகாரி ரமேஷ், கூடுதல் வனத்துறை அதிகாரி அங்கராஜூ உள்பட பலர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் செத்து கிடந்த யானையின் உடலை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது அந்த யானையின் தலை மற்றும் உடலில் துப்பாக்கி குண்டுகள் துளைக்கப்பட்டிருந்தது. மேலும், அந்த யானையின் 2 தந்தங்களும் வெட்டப்பட்டு இருந்தது.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு கால்நடை டாக்டர் சிவக்குமார் வரவழைக்கப்பட்டார். அவர், அதேப்பகுதியில் வைத்து யானைக்கு பிரேத பரிசோதனை செய்தார். பின்னர் யானையின் உடல் அங்கேயே குழித்தோண்டி புதைக்கப்பட்டது.

இதுகுறித்து வனத்துறை அதிகாரி ரமேஷ் கூறுகையில், ‘யாரோ மர்மநபர்கள் வனப்பகுதிக்குள் புகுந்து யானையை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுள்ளனர். பின்னர், யானையின் 2 தந்தங்களையும் வெட்டி கடத்தி சென்றுள்ளனர். தந்தங்களுக்காக யானையை அவர்கள் கொன்றுள்ளது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறோம். அந்த மர்மநபர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது’ என்றார். 

மேலும் செய்திகள்