ஆன்-லைனில் செல்போன் ஆர்டர் செய்த வாடிக்கையாளர்களிடம் நூதன மோசடி

ஆன்-லைனில் செல்போன் ஆர்டர் செய்த வாடிக்கையாளர்களிடம் நூதன மோசடி செய்த பெங்களூரு தனியார் நிறுவன ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-02-07 23:14 GMT
கோலார் தங்கவயல்,

கோலார் மாவட்டம் முல்பாகலில் ஆன்-லைனில் ஆர்டர் செய்யப்பட்ட செல்போன்களுக்கு பதிலாக சோப்புகள், ேவறு பொருட்கள் வருவதாக வாடிக்கையாளர்கள் சார்பில் ஆன்-லைன் மூலம் பொருட்களை வினியோகிக்கும் தனியார் நிறுவனத்தில் புகார் தரப்பட்டு இருந்தது.

அதன் அடிப்படையில் தனியார் நிறுவன சார்பில், முல்பாகல் டவுன் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்த நிலையில் பெங்களூரு ஒசகோட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்த முல்பாகல் தாலுகா நீதரமங்களா கிராமத்தை சேர்ந்த சோமசேகர் (வயது 28) என்பவரை பிடித்து முல்பாகல் போலீசார் விசாரித்தனர்.

விசாரணையின் போது சோமசேகர் ஆன்-லைனில் வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்யும் செல்போன்களுக்கு பதிலாக சோப்புகள், வேறு பொருட்களை வைத்து கொடுத்தது தெரியவந்தது. மேலும் அவர் ஆன்-லைனில் பணம் செலுத்தும் வாடிக்கையாளர்களிடம் தான் செல்போனுக்கு பதிலாக சோப்பு, வேறு பொருட்களை கொடுத்து உள்ளார். நேரில் பணம் செலுத்தி செல்போன்களை பெற்று கொள்ளும் வாடிக்கையாளர்களிடம் அவர் கைவரிசை காட்டவில்லை.

ஆடம்பர வாழ்க்கை வாழ ஆசைப்பட்டு, அவர் வாடிக்கையாளர்களின் செல்போனை திருடியதும் தெரியவந்தது.

இதையடுத்து சோமசேகரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.10 லட்சம் மதிப்பிலான 44 விலையுயர்ந்த செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைதான சோமசேகர் மீது முல்பாகல் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்