திருப்பூரில் 10-ந் தேதி பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்ட மைதானத்தில் டெல்லி சிறப்பு பாதுகாப்பு குழு போலீசார் சோதனை

திருப்பூரில் வருகிற 10-ந் தேதி பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் பொதுக்கூட்ட மைதானத்தில் டெல்லி சிறப்பு பாதுகாப்பு குழு போலீசார் நேற்று சோதனை நடத்தினார்கள்.

Update: 2019-02-07 22:04 GMT
திருப்பூர், 

பிரதமர் நரேந்திர மோடி வருகிற 10-ந்தேதி திருப்பூர் பெருமாநல்லூரில் நடைபெற உள்ள அரசுவிழா மற்றும் கட்சி பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக வருகை தருகிறார். இதில் பல்வேறு மத்திய மந்திரிகளும், தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்பட அமைச்சர்களும் இதில் கலந்து கொள்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை அரசும், மாவட்ட நிர்வாகமும், பா.ஜனதா கட்சியினரும் இணைந்து செய்து வருகின்றனர். மேடை, ஹெலிபேட் அமைக்கும் பணி, பொதுமக்கள், அரசியல் முக்கிய பிரமுகர்கள், அரசு அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோர் அமருவதற்கான இடங்கள் என அனைத்து பணிகளும் இரவு, பகலாக நடைபெற்று வருகிறது.

பொக்லைன் எந்திரம், லாரி உள்ளிட்டவைகளின் உதவியுடன் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் மைதானம் அமைக்கும் பணி, மேடை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், ஒரே இடத்தில் பல தலைவர்கள், அரசு அதிகாரிகள் வருகை தர உள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டு உள்ளது. இதன்படி ஹெலிபேட் அமைக்கப்படும் இடத்தை போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மைதானத்தில் டெல்லி சிறப்பு பாதுகாப்பு போலீஸ் குழுவினர், வெடிகுண்டு கண்டறியும் நவீன கருவிகள் மூலம் ஹெலிபேட் மைதானம், பொதுக்கூட்டம் மைதானம் உள்ளிட்ட பகுதிகள் முழுவதையும் சோதனையிட்டு வருகின்றனர்.

மைதானம் அமைக்கும் பணியில் நூற்றுக்கணக்கானோர் பணியாற்றி வருவதால், அவர்கள் குறித்த தகவல்களையும் போலீசார் சேகரித்து வருகின்றனர். நேற்று மாலை நுண்ணறிவு பிரிவு உதவி இயக்குனர் முரளிதரன், மேற்கு மண்டல ஐ.ஜி. பெரியய்யா, டி.ஐ.ஜி.க்கள் கார்த்திகேயன், செந்தில்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கயல்விழி ஆகியோர் மைதானத்தை பார்வையிட்டு ஆலோசனை நடத்தினார்கள். இந்த நிலையில் மைதானத்தில் பா.ஜனதா கட்சியின் மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் சின்னசாமி தலைமை தாங்கினார்.

மாநில துணைத்தலைவர் சிவகாமி பரமசிவம், கோட்ட இணை பொறுப்பாளர் பாயிண்ட் மணி, கோட்ட அமைப்பு செயலாளர் பால குமார், பொதுசெயலாளர் செந்தில் சண்முக சுந்தரம், மாநில செயற்குழு உறுப்பினர் சீனிவாசன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில் திருப்பூர், பல்லடம் உள்பட 15 மண்டல பகுதிகளில் இருந்து மட்டும் சுமார் 75 ஆயிரம் பேரை பொதுக்கூட்டத்திற்கு அழைத்து வருவது என்றும், திருப்பூருக்கு வரும் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது என்றும், ஆயத்த பணிகளை விரைந்து முடிப்பது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்