பனியன் நிறுவன மேலாளரிடம் ரூ.1½ லட்சம் வழிப்பறி- மேற்பார்வையாளர் உள்பட 3 பேர் கைது
திருப்பூரில் பனியன் நிறுவன மேலாளரிடம் ரூ.1½ லட்சம் வழிப்பறி செய்த வழக்கில் பனியன் நிறுவன மேற்பார்வையாளர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-
நல்லூர்,
திருப்பூர் மாநகராட்சி சந்தராபுரம் அருகே உள்ள சாஸ்திரி நகரில் ஒரு பனியன் நிறுவனம் இயங்கி வருகிறது. அந்த நிறுவனத்தில் முத்தூர் ரோடு பச்சாபாளையம், பகுதியை சேர்ந்த பச்சையப்பா கவுண்டர் மகன் ரவிச்சந்திரன் (வயது 31) மேலாளராகவும், புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் மேட்டுத்தெரு பகுதியை சேர்ந்த தென்னரசு மகன் ராம்குமார் (23) மேற்பார்வையாளராகவும் வேலை செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் கடந்த 4-ந் தேதி ரவிச்சந்திரனும், ராம்குமாரும் திருப்பூர் கருவம்பாளையத்தில் உள்ள ஒரு நிறுவனத்தில் இருந்து ரூ.1½ லட்சத்தை பெற்றுக்கொண்டு மோட்டார் சைக்கிளில் வந்துள்ளனர். வாகனத்தை ராம்குமார் ஓட்டி வந்தார். ரவிச்சந்திரன் பணப்பையுடன் மோட்டார் சைக்கிளின் பின்னால் உட்கார்ந்து இருந்தார்.
சந்தராபுரம் அம்மா உணவகம் அருகே அவர்கள் வந்த போது, அந்த வழியாக மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் ரவிச்சந்திரன் மீது மிளகு பொடியை தூவி, ரூ.1½ லட்சம் இருந்த பணப்பையை வழிப்பறி செய்துவிட்டு, அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இதுகுறித்து ரவிச்சந்திரன் திருப்பூர் ஊரக போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மீனாகுமாரி தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது ராம்குமார் மீது போலீசாருக்கு சந்தேகம் வந்தது. இதனால் ராம்குமாரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் ரவிச்சந்திரனுடன் சென்ற மேற்பார்வையாளர் ராம்குமார், தனது நண்பர்களான புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தை சேர்ந்த அருண் (23), விஜய்(21) ஆகியோர் மூலம் ரவிச்சந்திரனிடம் இருந்து ரூ.1½ லட்சத்தை வழிப்பறி செய்தது தெரியவந்தது.
இதைதொடர்ந்து ராம்குமார், அருண், விஜய் ஆகியோரை கைது செய்து, அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 44 ஆயிரத்தை மீட்டனர். பின்னர் கைது செய்யப்பட்ட 3 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.