அ.தி.மு.க- தி.மு.க.வுடன் கூட்டணி கிடையாது - கோவையில் கமல்ஹாசன் பேட்டி

‘அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வுடன் கூட்டணி கிடையாது’ என்று கோவையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறினார்.

Update: 2019-02-07 23:00 GMT
கோவை,

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேற்று மதியம் பொள்ளாச்சியில் இருந்து சென்னை செல்வதற்காக கோவை விமான நிலையம் வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

பொள்ளாச்சி மண்டல தலைமையகத்தில் நடைபெற்ற 2 நாள் கூட்டத்தில் கட்சியின் கட்டமைப்பு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. வருகிற தேர்தலில் மக்கள் நீதிமய்யம் கட்சி தி.மு.க.வுடன் கூட்டணி வைக்காது என்ற தகவல் உண்மைதான். மக்களுக்கு நல்லதை பரிமாற முற்பட்டு இருக்கும்போது, கையை சுத்தமாக வைத்திருக்கிறோம். அவசரமாக கைகுலுக்கலில் ஈடுபட்டு கை அழுக்காகி விட வேண்டாம் என முடிவெடுத்து உள்ளோம்.

அ.தி.மு.க.வை தனியாக சொல்லவில்லை என எண்ண வேண்டாம். ஆரம்பத்தில் இருந்தே அந்த கட்சியை எதிர்த்து வருகிறேன். எனவே அ.தி.மு.க.வுடனும் கூட்டணி கிடையாது.

நடிகர் ரஜினிகாந்த் தனது இல்ல திருமணத்துக்காக அரசியல் கட்சியினரை அழைக்க போயிருக்கிறார். இந்து திருமண முறை பற்றி தி.மு.க. வினர் பேசுவது புதிது அல்ல. அது எனக்கு பேரதிர்ச்சியையும் தரவில்லை. அது அவர்கள் கருத்து. இஸ்லாமிய திருமணத்தில் இந்து திருமண முறை குறித்து மு.க.ஸ்டாலின் பேசியிருக்க தேவை இல்லை என்பது என் கருத்து.

இவ்வாறு அவர் கூறினார்.

அவரிடம் அம்மா மக்கள் முன்னேற்ற கழக கட்சியுடன் கூட்டணி இருக்குமா? என்ற கேள்விக்கு, ‘எங்கள் கை சுத்தமாக இருக்க வேண்டும் என்ற முயற்சியில் இருக்கும்போது யாருடன் கைகோர்க்கிறோம் என்பதை வெகு ஜாக்கிரதையாக ஆராய வேண்டியுள்ளது. எங்கள் கை கறை படுத்தாத வகையில் தான் கூட்டணி அமைக்கப்படும்’ என்று பதில் அளித்தார்.

அப்படியென்றால் தனித்து போட்டியா? என்ற கேள்விக்கு கமல்ஹாசன் பதில் அளிக்கையில், ‘ஏற்பாடுகள் அதை நோக்கித் தான் இருக் கிறது. அது மக்கள் கையில் தான் உள்ளது. எல்லா தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்பது எங்கள் எண்ணம்’ என்று பதில் அளித்தார்.

மேலும் செய்திகள்