அதிக வட்டி தருவதாக பாடகர், குழுவினரிடம் ரூ.17¾ கோடி மோசடி தனியார் நிறுவன இயக்குனர் கைது
அதிக வட்டி தருவதாக பாடகர் மற்றும் அவரது குழுவினரிடம் ரூ.17¾ கோடி மோசடியில் ஈடுபட்ட தனியார் நிறுவன இயக்குனரை போலீசார் கைது செய்தனர்.
மும்பை,
மும்பை மாகிம் பகுதியை சேர்ந்தவர் இந்திபட பாடகர் ரோட்னி பெர்னான்டஸ். இவர் ‘பைன்டிங் பனி' என்ற படத்தில் பாடி உள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தனியார் முதலீடு நிறுவனத்தின் இயக்குனர்கள் மயூர் அசோக் அகர்வால், சஞ்சய் அகர்வால், நிதின், கிரன் ஆகிய 4 பேர் பாடகரை சந்தித்து பேசினர்.
அப்போது அவர்கள், தங்கள் நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்தால் 18 முதல் 22 சதவீதம் வரை வட்டி தருவதாக கூறினர். இதை நம்பிய ரோட்னி பெர்னான்டஸ் மற்றும் அவரது பாடல் குழுவை சேர்ந்தவர்கள் அந்த நிறுவனத்தில் ரூ.17¾ கோடி முதலீடு செய்தனர். முதலில் அவர்களுக்கு முறையாக வட்டி கிடைத்தது. சில மாதங்களில் வட்டி வருவது நின்று விட்டது.
இதனால் ரோட்னி பெர்னான்டஸ் இதுபற்றி அந்த நிறுவனத்தினரிடம் கேட்டார். ஆனால் அவர்கள் முறையான பதில் அளிக்கவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்த அவர் மோசடி குறித்து போலீசில் புகார் அளித்தார்.
இந்த புகார் குறித்து வழக்குப்பதிவு செய்த பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தனியார் நிறுவன இயக்குனர் மயூா் அசோக் அகா்வாலை அதிரடியாக கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 3 பேரை தேடி வருகின்றனர்.