சில்லறை காசுகள் தருவதாக கூறி ஏமாற்றி மளிகை கடைக்காரரிடம் நூதன முறையில் ரூ.15 ஆயிரம் திருட்டு
வேடசந்தூரில், மளிகை கடைக்காரரிடம் சில்லறை காசுகள் தருவதாக கூறி ஏமாற்றி நூதன முறையில் ரூ.15 ஆயிரம் திருடிச் சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
வேடசந்தூர்,
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் நேருஜி நகரை சேர்ந்தவர் செந்தில். இவர் வேடசந்தூர்-கரூர் சாலையில் மளிகை கடை வைத்துள்ளார். இவர் நேற்று காலையில் வழக்கம்போல் கடையை திறந்து வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது அவருடைய கடை போன் எண்ணுக்கு மர்ம நபர் ஒருவர் தொடர்பு கொண்டு பேசினார். அவர் வேடசந்தூர் குங்குமக்காளியம்மன் கோவில் தெருவில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் இருந்து மேலாளர் என்றும், ரூ.30 ஆயிரத்துக்கு சில்லறை காசுகள் உள்ளது எனவும், நேரில் வந்து பெற்றுக் கொள்ளும்படி கூறினார். உடனே செந்தில் ரூ.15 ஆயிரத்துக்கு மட்டும் சில்லறை காசுகள் போதும், அதற்கான பணத்தை கொடுத்து அனுப்புகிறேன் என்று கூறியதாக தெரிகிறது.
இதை தொடர்ந்து கடையில் வேலை பார்க்கும் பழனிச்சாமி என்பவரிடம் ரூ.15 ஆயிரத்தை கொடுத்து வங்கிக்கு அனுப்பினார். அவர் அந்த வங்கிக்கு சென்றார். அப்போது வங்கிக்குள் இருந்து தொப்பி வைத்துக்கொண்டு வந்த மர்ம நபர் பழனிச்சாமியிடம் சில்லறை காசுகள் வேடசந்தூர் ஆத்துமேட்டில் உள்ள தனியார் வங்கி கிளையில் இருப்பதாக கூறியுள்ளார்.
இதை நம்பி கடை ஊழியர், மர்ம நபருடன் ஆத்துமேடு பகுதியில் உள்ள தனியார் வங்கிக்கு சென்றார். அங்கு 2 சாக்கு மூட்டைகளில் வைக்கப்பட்டுள்ள பெட்டிகளில் சில்லறை காசுகள் இருப்பதாக மர்ம நபர் கூறி உள்ளார். உடனே ரூ.15 ஆயிரத்தை அவர் பெற்றுக் கொண்டு அங்கு இருந்து மின்னல் வேகத்தில் தப்பி சென்றார்.
அந்த மூட்டைகளை பழனிச்சாமி கடைக்கு கொண்டு வந்தார். மூட்டைகளில் செந்தில் பிரித்தபோது, அட்டை பெட்டிக்குள் உப்பு பாக்கெட்டுகள் அடுக்கி வைத்து நூதன முறையில் பணத்தை திருடி சென்று இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே சம்பந்தப்பட்ட தனியார் வங்கிக்கு சென்று மர்ம நபரை தேடி பார்த்தனர். அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து வேடசந்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவம் நடந்த இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அதில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி கிளையில் வைக்கப்பட்டிருந்த கண் காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். தொப்பி அணிந்து நின்ற மர்ம நபரின் உருவம் பதிவாகி இருப்பதை கண்டுபிடித்தனர்.
கடந்த மாதம் 2-ந்தேதி வேடசந்தூர் சாலை தெருவில் காளனம்பட்டியை சேர்ந்த சண்முகவேல் என்பவரிடம் மோட்டார் சைக்கிள் பெட்டியில் வைத்திருந்த ரூ.47 ஆயிரத்தை திருடியவரின் உருவமும், கண்காணிப்பு கேமராவில் பதிவான மர்ம நபரின் உருவமும் ஒன்று என்பது தெரியவந்தது. எனவே வேடசந்தூரில் தொடர்ந்து நடைபெற்ற 2 திருட்டு சம்பவங்களிலும் மர்ம நபர் ஒருவர் என்பதை போலீசார் உறுதி செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர். சில்லறை காசுகள் தருவதாக கூறி உப்பு பாக்கெட்டு கொடுத்து ரூ.15 ஆயிரம் வியாபாரியிடம் திருடி சென்ற சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.