தூவானம் ஏரியில் தண்ணீர் திறப்பு நிறுத்தம், பாறையாக காட்சி அளிக்கும் சுருளி அருவி

தூவானம் ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டதாலும், மழை இல்லாததாலும் சுருளி அருவி வெறும் பாறையாக காட்சி அளிக்கிறது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

Update: 2019-02-07 22:45 GMT
உத்தமபாளையம்,


தேனி மாவட்டத்தில் சுருளி அருவி முக்கிய சுற்றுலா தலமாக விளங்குகிறது. ஹைவேவிஸ் மலை மற்றும் சுருளி மலை பகுதியில் பெய்யும் மழை மூலம் இந்த அருவியில் தண்ணீர் கொட்டும். இதுதவிர ஹைவேவிஸ் மலை பகுதியில் உள்ள தூவானம் ஏரியில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் சுமார் 9 கிலோமீட்டர் தூரம் அடர்ந்த வன பகுதி வழியாக வந்து அருவியாக கொட்டும். கடந்த சில மாதங்களாக மழை இல்லாததால் அருவிக்கு குறைந்த அளவு தண்ணீர் மட்டும் வந்து கொண்டு இருந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் நின்று குளித்து சென்றனர்.

இந்தநிலையில் ஹைவேவிஸ் மலை பகுதியில் மழை இல்லாததால் தூவானம் ஏரியில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் நேற்று முன்தினம் நிறுத்தப்பட்டது. இதனால் அருவி தண்ணீர் இன்றி பாறையாக காட்சி அளிக்கிறது. மேலும் அருவியில் குளிக்க வந்த சுற்றுலா பயணிகள் தண்ணீர் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

மேலும் செய்திகள்