அந்தியூர், பர்கூர் வனப்பகுதியில் வறட்சி: தண்ணீர் தேடி சாலைகளில் உலா வரும் ஒற்றை யானை கவனமுடன் செல்ல வாகன ஓட்டிகளுக்கு வேண்டுகோள்

அந்தியூர், பர்கூர் வனப்பகுதியில் வறட்சி ஏற்பட்டு உள்ளதால் தண்ணீர் தேடி, அங்குள்ள சாலைகளில் ஒற்றை யானை உலா வருகிறது. எனவே வாகன ஓட்டிகள் கவனமுடன் செல்ல வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

Update: 2019-02-07 22:30 GMT
அந்தியூர், 

அந்தியூர் மற்றும் பர்கூர் வனப்பகுதியில் சிறுத்தை, புலி, மான், யானை, காட்டெருமை, கரடி, கழுதைப்புலி, செந்நாய் உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. போதிய மழை இல்லாததாலும், வறட்சி நிலவி வருவதாலும் வனப்பகுதியில் உள்ள செடி-கொடிகள் கருகி வருகின்றன. மேலும் குட்டைகளிலும் தண்ணீர் இல்லை.

இதனால் உணவு மற்றும் தண்ணீரை தேடி வனப்பகுதியில் இருந்து வனவிலங்குகள் வெளியேறி விடுகின்றன. குறிப்பாக யானைகள் அடிக்கடி வெளியேறி அந்தியூர் அருகே உள்ள தாமரைக்கரை குளத்துக்கு தண்ணீர் குடிக்க வருகின்றன.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஒற்றை யானை தாமரைக்கரை குளத்துக்கு வந்து தண்ணீர் குடித்து செல்கிறது. நேற்றும் இந்த யானை தாமரைக்கரை குளத்துக்கு தண்ணீர் குடிக்க வந்தது. தண்ணீர் குடித்துவிட்டு ஈரெட்டி சாலையில் அந்த யானை உலா வந்தது. அப்போது அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் யானையை கண்டதும் தங்களுடைய வாகனங்களை நிறுத்தினர். பின்னர் அந்த யானையை செல்போனில் படம் பிடித்தனர். சிறிது நேரம் கழித்து அந்த யானை அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது.

இதுகுறித்து அந்தியூர் வனத்துறையினர் கூறுகையில், ‘அந்தியூர் மற்றும் பர்கூர் வனப்பகுதியில் வறட்சி நிலவி வருவதால் தாமரைக்கரை குளத்துக்கு யானைகள் கூட்டம் கூட்டமாக வந்து தண்ணீர் குடித்து செல்கிறது. கடந்த சில நாட்களாக ஒற்றை யானை, தாமரைக்கரை குளத்துக்கு தண்ணீர் குடிக்க வருகிறது. மேலும் அந்த யானை ரோட்டில் உலா வருகிறது. அதனால் வாகன ஓட்டிகள் மிதமான வேகத்தில் செல்ல வேண்டும். யானை ரோட்டில் நிற்பதை கண்டால் வாகனங்களில் இருந்து கீழே இறங்கக்கூடாது. அதேபோல் செல்போனில் படம் பிடிக்கவும் முயற்சிக்கக்கூடாது. வாகனங்களில் கவனமுடன் செல்ல வேண்டும்’ என்றனர்.

மேலும் செய்திகள்