த.மா.கா. வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் இளைஞர் அணி தலைவர் எம்.யுவராஜா தொடங்கி வைத்தார்

த.மா.கா. வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை இளைஞர் அணி தலைவர் எம்.யுவராஜா தொடங்கி வைத்தார்.

Update: 2019-02-07 23:00 GMT
ஈரோடு, 

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணி சார்பில் தமிழகம் முழுவதும் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் முதல் கட்டமாக ஓட்டுகளை விலைக்கு விற்கக்கூடாது என்று வாக்காளர்களை கேட்டுக்கொள்ளும் வகையில் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் நேற்று தொடங்கியது. இந்த நிகழ்ச்சியை த.மா.கா. இளைஞர் அணி தலைவர் எம்.யுவராஜா நேற்று ஈரோட்டில் தொடங்கி வைத்தார். ஈரோடு பெருந்துறை ரோட்டில் ஆசிரியர் காலனி பஸ் நிறுத்தம் அருகே நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட இளைஞர் அணி தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார்.

மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.டி.சந்திரசேகர் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் த.மா.கா. இளைஞர் அணி தலைவர் எம்.யுவராஜா கலந்து கொண்டு அங்கு வைக்கப்பட்டு இருந்த பதாகையில் கையொப்பமிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். மேலும், அங்கு பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களும் வழங்கினார். பின்னர் அவர் கூறியதாவது:-

தமிழக வாக்காளர்கள் மாற்றம் வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால் மாற்றத்தை யார் தொடங்குவது. முதலில் மாற்றத்தை விரும்பும் மக்களிடம் இருந்து மாற்றம் நிகழ வேண்டும். குறிப்பாக மாற்றத்தை அளிக்கும் முக்கிய சக்தியாக வாக்கு சக்தி, அதாவது ஓட்டு உள்ளது. எனவே அனைவரும் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்க வேண்டும். அது நமது ஜனநாயக கடமை என்பதை உணர வேண்டும்.

அப்படி நாம் அளிக்கும் வாக்கு, நமது எதிர்காலத்துக்கான குரல் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். எனவே நமது ஓட்டுகளை பொறுப்புடன் அளிக்க வேண்டும்.

தற்போது நாட்டில் ஓட்டுக்கு பணம் என்ற கலாசாரம் பரவி இருக்கிறது. பணம் கொடுத்தால் ஓட்டு கிடைக்கும் என்ற அபிப்பிராயம் அரசியல் கட்சியினரிடம் இருக்கிறது. இதனை வாக்காளர்கள் மாற்ற வேண்டும். ஓட்டுக்கு பணம் கொடுப்பவர்களை நிராகரித்து, ஜனநாயக கடமையை சுதந்திரத்துடன், சிந்தித்து செயல்படுத்துவோம் என்பதை வலியுறுத்தியும், வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் த.மா.கா. சார்பில் இந்த கையெழுத்து இயக்கம் நடக்கிறது.

இவ்வாறு த.மா.கா. இளைஞர் அணி தலைவர் எம்.யுவராஜா கூறினார்.

மேலும் செய்திகள்