மார்த்தாண்டம் அருகே பாஸ்போர்ட் புதுப்பிக்க போலி ஆவணங்கள் கொடுத்தவர் கைது

மார்த்தாண்டம் அருகே பாஸ்போர்ட் புதுப்பிக்க போலி ஆவணங்கள் கொடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-02-07 22:15 GMT
குழித்துறை,

மார்த்தாண்டம் அருகே உள்ள சென்னித்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 44). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார்.     தற்போது அவர் சொந்த ஊரில் வசித்து வருகிறார். சுரேஷ்குமார் மீண்டும் வெளிநாடு செல்ல திட்டமிட்டார். இதற்கிடையே அவரது பாஸ்போர்ட் காலாவதியாகி விட்டது.

எனவே, அவர் பாஸ்போர்ட்டை புதுப்பிக்க கோரி விண்ணப்பித்தார். இதற்காக அவர் போலி ஆவணங்களை கொடுத்துள்ளார். அவரது விண்ணப்பத்தை மதுரையில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

அப்போது, அதில் போலி ஆவணங்கள் இணைக்கப்பட்டிருப்பதை அதிகாரிகள் கண்டனர். இதுகுறித்து அதிகாரிகள் மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதையடுத்து மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேஷ்குமாரை கைது செய்தனர்.

அவரிடம் போலி ஆவணங்கள் குறித்தும், போலி ஆவணங்கள் தயாரிப்பதில் அவருக்கு உதவியாக இருந்தவர்கள் யார்?– யார்? என்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்