செய்யாறில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பஸ் ஊர்வலம் தூசி கே.மோகன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

செய்யாறில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பஸ் ஊர்வலத்தை தூசி கே.மோகன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

Update: 2019-02-07 23:00 GMT

செய்யாறு,

செய்யாறு அரசு போக்குவரத்து பணிமனை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பஸ் ஊர்வலத்தின் தொடக்க விழா பஸ் நிலையத்தில் நடந்தது. செய்யாறு உதவி கலெக்டர் அன்னம்மாள் தலைமை தாங்கினார். தாசில்தார் மூர்த்தி, போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜனார்த்தனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பணிமனை மேலாளர் விநாயகம் வரவேற்றார்.

சிறப்பு விருந்தினராக தூசி கே.மோகன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேனர்கள், சாலை பாதுகாப்பு விதிமுறைகள் கொண்டு அலங்கரிக்கப்பட்ட பஸ்சை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் பஸ் பயணிகளுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

அரசு பாலிடெக்னிக் கல்லூரி, அரசு கலைக்கல்லூரி உள்ளிட்ட பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் பஸ் நிறுத்தி வைக்கப்படுகிறது. தொடர்ந்து வந்தவாசி வரை செல்லும் விழிப்புணர்வு பஸ், வழியில் உள்ள கிராமங்களில் பொதுமக்கள் கூடும் இடங்களில் நிறுத்தி சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. அங்கு பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்படுகிறது.

நிகழ்ச்சியில் அ.தி.மு.க. நிர்வாகிகள் எம்.மகேந்திரன், எஸ்.ரவிச்சந்திரன், பி.லோகநாதன், ராஜமாணிக்கம், அரங்கநாதன், கோவிந்தன், ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விழிப்புணர்வு ஊர்வலத்தை தூசி கே.மோகன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்து அரசு பஸ்களில் பயணிகளிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். அப்போது ஒரு பயணி ஜன்னலின் கண்ணாடி ‌ஷட்டரை மூடினார். இதனை பார்த்த அ.தி.மு.க. நிர்வாகிகள், ஏன் ‌ஷட்டரை மூடுகிறாய் என கூறி திறக்க வறுபுறுத்தினர். பின்னர் எம்.எல்.ஏ. அந்த பயணியிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தை வழங்கினார். அதனை வாங்கிய பயணி, கீழே போட்டுவிட்டு விழிப்புணர்வு ஊர்வலத்தின் தொடக்க விழாவுக்காக பஸ் 25 நிமிடங்களுக்கு மேலாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டினார்.

செய்யாறில் இருந்து சென்னை செல்ல வேண்டிய பஸ் 25 நிமிடத்துக்கு மேல் காத்திருக்க வைத்தால் பயணி அவதியடைந்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்