சத்தியமங்கலம் அருகே பரபரப்பு, ஆதித்தமிழர் பேரவை நிர்வாகி காருக்கு நள்ளிரவில் தீவைப்பு

சத்தியமங்கலம் அருகே ஆதித்தமிழர் பேரவை நிர்வாகியின் காருக்கு நள்ளிரவில் மர்ம நபர்கள் தீவைத்தனர். இதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;

Update: 2019-02-06 21:45 GMT
சத்தியமங்கலம், 

சத்தியமங்கலம் அருகே உள்ள சிக்கரசம்பாளையம் பாரதிநகரை சேர்ந்தவர் பெ.பொன்னுசாமி. இவர் ஆதித்தமிழர் பேரவையின் ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளராக உள்ளார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு பொன்னுசாமி வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்தார். அப்போது நள்ளிரவு 12.30 மணி அளவில் வாசலில் நாய் குரைக்கும் சத்தம் கேட்டது. அதனால் பொன்னுசாமி எழுந்து வெளியே வந்து பார்த்தார்.

அப்போது வீட்டு வாசலில் நிறுத்தி இருந்த அவருடைய கார் பின்பகுதியில் தீப்பிடித்து எரிந்தது. உடனே அவர் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தார். ஆனாலும் நம்பர் பிளேட் இருந்த பகுதி எரிந்து நாசம் ஆகியிருந்தது. யாரோ மர்ம நபர்கள் காரின் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்துவிட்டு ஓடிவிட்டார்கள்.

இதைத்தொடர்ந்து நேற்று அவர் பேரவையின் தொண்டர்களுடன் சத்தி போலீஸ் நிலையத்துக்கு சென்று, இதுபற்றி புகார் அளித்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, காருக்கு தீ வைத்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

காருக்கு தீவைக்கப்பட்டது குறித்து பொன்னுசாமி கூறும்போது, ‘யாரோ எனக்கு வேண்டாதவர்கள் என்னுடைய கார் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்துவிட்டார்கள். நாய் குரைத்ததால் உடனே வெளியே வந்து பார்த்து தீயை அணைத்துவிட்டேன். இல்லை என்றால் கார் முழுவதும் எரிந்து நாசம் ஆகியிருக்கும் என்றார்.

இதற்கிடையே பொன்னுசாமியின் காருக்கு தீ வைத்த மர்ம நபர்களை போலீசார் உடனே கைது செய்யக்கோரி ஆதித்தமிழர் பேரவையினர் நேற்று பகல் 2 மணி அளவில் சத்தி பஸ் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். பேரவையின் மாவட்ட துணை செயலாளர் விடுதலை செல்வன் ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பேரவை உறுப்பினர்கள், காருக்கு தீ வைத்த மர்ம நபர்களை உடனே கைது செய்யவேண்டும் என்று கோஷம் போட்டார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் கலந்துகொண்டார்கள். 

மேலும் செய்திகள்