குடிநீர் சீராக வழங்கக்கோரி அவினாசி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
குடிநீர் சீராக வழங்கக்கோரி அவினாசி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அவினாசி,
அவினாசி ஊராட்சி ஒன்றியம் உப்பிலிபாளையம் ஊராட்சிக்குட்பட்டது தண்ணீர் பந்தல் பாளையம். இங்கு 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்த கிராமத்தில் கடந்த 2 மாதமாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. அத்துடன் சப்பை தண்ணீரும் வினியோகம் செய்யப்படவில்லை. இதுபற்றி ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள் நேற்று காலை காலிக்குடங்களுடன் அவினாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்த ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது பொதுமக்கள் கூறியதாவது:-
எங்கள் கிராமத்துக்கு கடந்த 2 மாதமாக குடிநீர் வரவில்லை. சப்பை தண்ணீரும் வினியோகம் செய்யவில்லை. ஆழ்குழாய் கிணறுகளில் உள்ள மின்மோட்டார், குழாய்கள் போன்றவற்றை காணவில்லை. அதை மீண்டும் பொருத்தி சப்பை தண்ணீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
மேலும் தண்ணீர் வினியோகம் செய்ய நிரந்தரமாக பணியாளரை நியமிக்க வேண்டும். ஊராட்சி அலுவலகத்தில் செயலாளர் இருப்பதில்லை. இதனால் வீட்டுவரி, குடிநீர் கட்டணம் போன்றவற்றை கட்டமுடியாத நிலை உள்ளது. எனவே எங்கள் கிராமத்துக்கு குடிநீர் சீராக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
இதைதொடர்ந்து பொதுமக்களின் கோரிக்கைகளை உடனே நிறைவேற்றுவதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.