மனைப்பட்டா, அடுக்குமாடி குடியிருப்பு கேட்டு மறைமலையடிகள் சாலையில் பொதுமக்கள் திடீர் மறியல் போக்குவரத்து பாதிப்பு

ஆட்டுப்பட்டியை சேர்ந்தவர்கள் மனைப்பட்டா, அடுக்குமாடி குடியிருப்பு கேட்டு அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமையில் மறைமலையடிகள் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2019-02-06 23:45 GMT

புதுச்சேரி,

புதுச்சேரி ஆட்டுப்பட்டி பகுதியில் 120–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பல ஆண்டுகளாக வசித்து வருகிறார்கள். இவர்கள் தங்களுக்கு மனைப்பட்டா, அடுக்குமாடி குடியிருப்பு கட்டித்தர வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதுதொடர்பாக அரசு அதிகாரிகள், அமைச்சர், முதல்–அமைச்சரிடம் மனு அளித்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன் முதல்–அமைச்சர் நாராயணசாமி ஆட்டுப்பட்டி பகுதியில் ஆய்வு செய்து அடுக்குமாடி குடியிருப்பு கட்டித்தர நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

ஆனால் இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காததால் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வான அன்பழகன் தலைமையில் ஆட்டுப்பட்டியை சேர்ந்த 200–க்கும் மேற்பட்டோர் மறைமலையடிகள் சாலையில் நேற்று மதியம் 12 மணியளவில் கொளுத்தும் வெயிலில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்து கிழக்குப்பகுதி போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு மாறன், உருளையன்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தனசெல்வம், சப்–இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் மறியலை கைவிட மறுத்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

தொடர்ந்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதையொட்டி மறியல் கைவிடப்பட்டது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின் அந்த பகுதியில் போக்குவரத்து சீரானது. அதன்பின்னர் அன்பழகன் எம்.எல்.ஏ., ஆட்டுப்பட்டி பகுதியில் காலியாக உள்ள மனையை பார்வையிட்டார். அங்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்ட சம்பந்தப்பட்டவர்களை பேசி நடவடிக்கை எடுப்பதாக பொதுமக்களிடம் கூறினார்.

மேலும் செய்திகள்