செயற்கைகோள் உதவியுடன் மணல் கடத்தலை தடுக்கலாம் அதிகாரிகளுக்கு, ஐகோர்ட்டு நீதிபதிகள் யோசனை
செயற்கைகோள் உதவியுடன் மணல் கடத்தலை தடுக்கலாம் என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள், அதிகாரிகளுக்கு யோசனை தெரிவித்துள்ளனர்.
மதுரை,
கரூர் மாவட்டம் மண்மங்கலம் அருகே வேலாயுதம்பாளையத்தை சேர்ந்த ராஜ்குமார், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:–
தோட்டக்குறிச்சி பகுதி வழியாக செல்லும் காவிரி ஆற்றில் இரவு நேரங்களில் மாட்டுவண்டி, டிராக்டர்கள் மூலம் மணல் கொள்ளை நடக்கிறது. இந்த மணலை புஞ்சை புகழூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இருப்பு வைத்து, அங்கிருந்து லாரிகள் மூலம் வெளிமாவட்டங்களுக்கு அனுப்புகின்றனர். இந்த சட்டவிரோத செயல், அரசு அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் நடக்கிறது. மணல் கொள்ளையால் இந்த பகுதியில் நிலத்தடிநீர் பாதிக்கப்படுகிறது. இதனால் விவசாயிகள், பொதுமக்களின் நலன் கருதி மணல் கொள்ளையை தடுக்க உத்தரவிட வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தோம்.
இதை விசாரித்த ஐகோர்ட்டு, சட்டவிரோதமாக மணல் குவாரிகள் செயல்படுவதை தடுக்க தேவையான நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுக்க வேண்டும். சிறப்பு குழுக்கள் அமைத்து 24 மணி நேரமும் அவ்வப்போது சம்பந்தப்பட்ட பகுதியில் ஆய்வு செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால் இந்த உத்தரவுகள் முறையாக அமல்படுத்தப்படவில்லை. எனவே கோர்ட்டு உத்தரவை செயல்படுத்தாத அதிகாரிகள் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, மணல் கடத்தலை தடுக்க அதிகாரிகள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.
அதற்கு மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல், அரசு பணியில் உள்ளவர்களே மணல் கடத்தலில் ஈடுபடுகின்றனர் என்று தெரிவித்தார்.
அதற்கு நீதிபதிகள், ‘‘அரசு பணியில் உள்ளவர்கள் மணல் கடத்தலில் ஈடுபட்டால், அவர்கள் மீது ஏன் துறை ரீதியான அதிகபட்ச நடவடிக்கையை எடுக்கக்கூடாது? மணல் கடத்தலை தடுக்க கண்காணிப்பாளர்களை நியமிப்பது போதிய பலன் அளிப்பதாக தெரியவில்லை. செயற்கைகோள் மூலம் புகைப்படங்களை எடுத்தல், கண்காணித்தல் போன்ற நவீன அறிவியல் முறைகளை பயன்படுத்தி மணல் கடத்தலை தடுக்கலாம் என்று நீதிபதிகள் யோசனை தெரிவித்தனர். பின்னர், இதுதொடர்பாக ஐகோர்ட்டுக்கு உதவுவதற்காக, சென்னை ஐ.ஐ.டி. இயக்குனரை எதிர்மனுதாரராக இந்த கோர்ட்டு தாமாக முன்வந்து சேர்க்கிறது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை வருகிற 13–ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.