ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை முதன்மை செயலாளர் ஆய்வு

ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை முதன்மை செயலாளர் நேற்று ஆய்வு செய்தார்.

Update: 2019-02-06 22:38 GMT
ஈரோடு, 

ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட வ.உ.சி.பூங்கா, நசியனூர் பேரூராட்சி மற்றும் கோபிசெட்டிபாளையம் ஊராட்சி ஒன்றியம், பா.வெள்ளாளபாளையம் ஊராட்சி ஆகிய பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் கூட்டுக்குடிநீர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை வணிக வரி மற்றும் பதிவு துறை முதன்மை செயலர் கா.பாலச்சந்திரன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதைத்தொடர்ந்து அவர் கூறியதாவது:-

ஈரோடு மாநகராட்சிகளுக்கு குடிநீர் திட்டம், செயல்படுத்துவதற்காக ரூ.484 கோடியே 45 லட்சம் மதிப்பீடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த திட்டம் முடிவுறும் தருவாயில், தற்போதைய மக்கள் தொகையின் படி 5 லட்சத்து 35 ஆயிரம் மக்களுக்கு 81.10 மில்லியன் லிட்டர் குடிநீரும், இடைக்கால (2032) மக்கள் தொகையின் படி 7 லட்சம் மக்களுக்கு 114.75 மில்லியன் லிட்டர் குடிநீரும், மற்றும் உச்சகட்ட மக்கள் தொகையின்படி 9 லட்சத்து 5 ஆயிரம் மக்களுக்கு 147.69 மில்லியன் லிட்டர் குடிநீரும் வழங்கப்படும். இந்த திட்டத்தின்படி நாளொன்றிற்கு ஒருவருக்கு 135 லிட்டர் குடிநீர் வழங்கும் வகையில் தரைதள நீர்தேக்க தொட்டி கட்டப்பட்டு வருகிறது. இந்த திட்டத்திற்கான ஆண்டு பராமரிப்பு செலவு ரூ.15 கோடியே 77 லட்சம் ஆகும்.

பவானியில் இருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஊராட்சிக்கோட்டை வரதநல்லூரில் காவிரி ஆற்றில் நீர் சேகரிப்பு கிணறு அமைத்து அதில் இருந்து இயல்பு நீர் எடுக்கப்பட்டு, 120 மில்லியன் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பப்படுகிறது. சுத்திகரிக்கப்பட்ட நீர் 52 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட தொட்டியில் இருந்து, 22.80 கிலோ மீட்டர் குழாய் மூலம் ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட சூரியம்பாளையம் மற்றும் வ.உ.சி பூங்கா ஆகிய இடங்களில் புதிதாக கட்டப்பட்டு வரும் 42 லட்சம் மற்றும் 188 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட தொட்டிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு, அதில் இருந்து பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட உள்ளது.

இந்த 2 தரைமட்ட தொட்டிகளில் இருந்து 79.683 கிலோ மீட்டர் கிளை நீருந்து குழாய் மூலம் புதிதாக கட்டப்பட்டு வரும் 21 மேல் நிலைத்தொட்டிகளுக்கும், நிலையில் உள்ள 46 பழைய மேல் நிலைத்தொட்டிகளுக்கும் கொண்டு செல்லப்படுகிறது. மேலும் 731.82 கிலோ மீட்டர் நீளம் உள்ள பகிர்மான குழாய் மூலம் குடிநீர் வினியோகிக்கப்பட உள்ளது. புதிதாக 1 லட்சத்து 30 ஆயிரம் குடிநீர் வீட்டிணைப்புகள் வழங்க உத்தேசிக்கப்பட்டு உள்ளது. இந்த பணிக்கான ஆணை கடந்த 2017-ம் ஆண்டு வழங்கப்பட்டு, பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த திட்டம் வருகிற ஜூலை மாதத்துக்குள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

இவ்வாறு முதன்மை செயலாளர் கா.பாலச்சந்திரன் கூறினார்.

அதைத்தொடர்ந்து ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட வீரப்பன்சத்திரம், வைராபாளையம் தலைமை நீரேற்று நிலையத்தில், குடிநீர் சுத்திகரிப்பு மற்றும் குளோரினேஷன் செய்யப்பட்டு வரும் பணியினையும், நசியனூர் மேற்கு புதூர் மற்றும் கோபிசெட்டிபாளையம் ஊராட்சி ஒன்றியம், பா.வெள்ளாளபாளையம் ஊராட்சியில் உள்ள தலா 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியினையும், பா.வெள்ளாளபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் மக்கும் மற்றும் மக்கா குப்பையில் இருந்து மண் புழு உரம் தயாரிக்கும் பணியினையும் முதன்மை செயலாளர் கா.பாலச்சந்திரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது அவருடன் மாவட்ட கலெக்டர் சி.கதிரவன், மாநகராட்சி ஆணையர் சீனிஅஜ்மல்கான் உட்பட துறை சார்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர். அதைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், ஈரோடு மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடந்தது.

மேலும் செய்திகள்