பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது: சட்டசபையில் பா.ஜனதா போராட்டம் கவர்னர் உரை பாதியில் முடிந்தது - கூச்சல், குழப்பத்தால் பரபரப்பு

கர்நாடக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் பெங்களூரு விதான சவுதாவில் தொடங்கியது. கவர்னர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜனதா தர்ணா போராட்டம் நடத்தியதால் கூச்சல்-குழப்பம் ஏற்பட்டு பரபரப்பு நிலவியது. இதன் காரணமாக கவர்னர் வஜூபாய்வாலா 5 நிமிடத்தில் உரையை முடித்துக்கொண்டு சென்றுவிட்டார்.

Update: 2019-02-06 23:30 GMT
பெங்களூரு,

கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி அரசு நடக்கிறது.

முதல்-மந்திரியாக குமாரசாமி உள்ளார். ஆபரேஷன் தாமரை மூலம் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) எம்.எல்.ஏ.க்களை இழுத்து ஆட்சி அமைக்க பா.ஜனதா முயற்சி செய்து வருகிறது.

தங்கள் கட்சியின் 20 எம்.எல்.ஏ.க்களுக்கு தலா ரூ.50 கோடி வீதம் ரூ.1,000 கோடி வழங்க பா.ஜனதா முயற்சி செய்வதாக சித்தராமையா குற்றம்சாட்டினார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 12 எம்.எல். ஏ.க் கள் வரை இந்த சட்டசபை கூட்டத்தை புறக்கணிப்பார்கள் என்று தகவல்கள் வெளியானது.

இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கர்நாடக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் 6-ந் தேதி (அதாவது நேற்று) தொடங்கும் என்றும், இது ஆண்டின் முதல் கூட்டத்ெதாடர் என்பதால் முதல் நாள் கூட்டத்தில் கவர்னர் உரையாற்றுவார் என்றும் கர்நாடக அரசு அறிவித்தது.

அதன்படி சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று பெங்களூரு விதான சவுதாவில் தொடங்கியது. இந்த கூட்டம் சரியாக காலை 11 மணிக்கு தொடங்கியது. 10.55 மணிக்கு சட்டசபைக்கு கவர்னர் வஜூபாய்வாலா வந்தார். அவரை முதல்-மந்திரி குமாரசாமி, துணை முதல்-மந்திரி பரமேஸ்வர், சபாநாயகர் ரமேஷ்குமார், மேல்-சபை தலைவர் பிரதாப் சந்திரஷெட்டிஆகியோர் வரவேற்று சபைக்குள் அழைத்து வந்தனர்.

சபாநாயகரின் இருக்கையில் அமர்ந்த கவா்னர், சரியாக 11 மணிக்கு தனது உரையை வாசிக்க தொடங்கினார். கவர்னர் பேச ெதாடங்கியதும், பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கவர்னரை முற்றுகையிட்டு, முழக்கங்களை எழுப்பி தர்ணாவில் ஈடுபட்டனர். இந்த அரசுக்கு பெரும்பான்மை இல்லை, கூட்டணி அரசு கவர்னரின் வாயில் பொய்களை சொல்லி பேச வைக்கிறது என்று கோஷம் எழுப்பினர்.

இதனால் சபையில் கூச்சல்-குழப்பமும், பரபரப்பும் நிலவியது. ஆளுங்கட்சி தரப்பில் உறுப்பினர்கள் அனைவரும் தங்களின் இருக்கையில் அமர்ந்திருந்தனர். உடனே கவர்னர், உறுப்பினர்கள் இவ்வாறு இடையூறு செய்தால் தன்னால் தொடர்ந்து பேச இயலாது என்று கூறினார். இவ்வாறு இடையூறு செய்தால் பேச்சை முடித்துக் கொள்வேன் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

ஆனால் பா.ஜனதா உறுப்பினர்கள் தொடா்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். கோஷங்களை எழுப்பியபடி இருந்தனர். இதையடுத்து 5 நிமிடங்கள் மட்டுமே பேசிய கவர்னர் தனது உரை அடங்கிய புத்தகத்தில் கடைசி பத்தியை படித்து முடித்தார். அதைத்தொடர்ந்து சபை உறுப்பினர்களிடம் இருந்து விடைபெற்று கவர்னர் வஜூபாய் வாலா புறப்பட்டு சென்றார். அவரை முதல்-மந்திரி குமாரசாமி உள்ளிட்டோர் வழியனுப்பி வைத்தனர்.

மீண்டும் சபை கூடியது. சபாநாயகர் ரமேஷ்குமார், சித்தகங்கா மடாதிபதி சிவக்குமார சுவாமி, முன்னாள் மத்திய மந்திரி ஜார்ஜ் பெர்னாண்டஸ் உள்ளிட்டோருக்கு இரங்கல் தீர்மானத்தை தாக்கல் செய்தார். அந்த இரங்கல் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த இரங்கல் தீர்மானத்தின்போது, சபை அமைதியாக இருந்தது.

கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிைலயில் காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ரமேஷ் ஜார்கிகோளி, உமேஷ் ஜாதவ், மகேஷ் கமடள்ளி, நாகேந்திரா உள்பட 9 எம்.எல்.ஏ.க்கள் நேற்றைய கூட்டத்தை புறக்கணித்தனர். மேலும் சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் சங்கர், நாகேஷ் ஆகியோரும் சட்டசபைக்கு வரவில்லை. அவர்கள் பா.ஜனதாவின் கட்டுப்பாட்டில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால், பெரும்பான்மையை நிரூபிக்கும்படி பா.ஜனதா வலியுறுத்தியுள்ளது.

அதே போல் பா.ஜனதாவை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் கருணாகரரெட்டி, சன்னப்பா செம்பண்ணவர், தொட்டண்ண கவுடா பட்டீல் ஆகிய 3 பேரும் சட்டசபை கூட்டத்தை புறக்கணித்துள்ளனர். அவர்களை தொடர்புகொள்ள பா.ஜனதா தலைவர்கள் முயற்சி மேற்கொண்டுள்ளனர். இதில் தொட்டண்ணகவுடா பட்டீல், தனது மகளுக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து வருவதால், இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்று கூறினார். கவர்னரின் உரையில் முக்கியமாக, “மேகதாதுவில் புதிய அணை கட்டும் திட்டத்திற்கு, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க மத்திய நீர்வள ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளது” என அறிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக சட்டசபை கூட்டத்தொடரையொட்டி விதான சவுதாவை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. உரிய அடையாள அட்டை வைத்துள்ளவர் களுக்கு மட்டுமே விதான சவுதா வளாகத்திற்குள் அனுமதி வழங்கப்படுகிறது.

மேலும் செய்திகள்