பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை எதிரொலி, வாழை இலை விலை தொடர்ந்து அதிகரிப்பு

பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடை காரணமாக வாழை இலை விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒரு கட்டு ரூ.1,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Update: 2019-02-06 22:45 GMT
கோவை,

ஒரு முறை பயன்படுத்தி விட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தமிழகம் முழுவதும் கடந்த ஜனவரி மாதம் 1-ந் தேதி முதல் தடை விதிக்கப்பட்டது. இதனால் தற்போது கோவையில் உள்ள சாலையோர உணவகங்கள் மற்றும் ஓட்டல்களில் வாழை இலை மூலம் உணவு பரிமாறப்பட்டு வருகிறது.

மீன், ஆடு, கோழி உள்ளிட்ட இறைச்சி கடைகளிலும் வாழை இலையை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் தற்போது வாழை இலைகளின் நுகர்வு அதிகரித்ததுடன், விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுகுறித்து கோவை டவுன்ஹால் தியாகி குமரன் காய்கறி மார்க்கெட் வாழை இலை வியாபாரி ஒருவர் கூறியதாவது:-

ஓட்டல்கள், கோவில் திருவிழா, திருமணம், மஞ்சள் நீராட்டு உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு வாழை இலைகள் அதிகளவு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. கோவை உக்கடம், டவுன்ஹால் தியாகி குமரன் மார்க்கெட், எம்.ஜி.ஆர். மார்க்கெட்டுகளுக்கு வாழை இலைகள் செல்வபுரம், பேரூர், ஆலாந்துறை, சுண்டப்பாளையம், தொண்டாமுத்தூர், நரசீபுரம், ஆனைக்கட்டி, தடாகம், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கொண்டு வரப்படுகின்றன.

பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டதாலும், தற்போது சுபமுகூர்த்த நிகழ்ச்சிகள் நடக்கும் மாதம் என்பதாலும் வாழை இலையின் தேவை அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக அதன் விலை தொடர்ந்து உயர்ந்தே காணப்படுகிறது.

கடந்த டிசம்பர் மாதம் 100 வாழை இலைகள் கொண்ட ஒரு கட்டு ரூ.300-க்கும், கடந்த ஜனவரி மாதம் ஒரு கட்டு ரூ.600-க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது ஒரு கட்டு ரூ.800 முதல் ரூ.1,000 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் ரூ.5-க்கு விற்கப்பட்ட தலை வாழை இலை ரூ.8-க்கும், ரூ.4-க்கு விற்ற சாப்பாட்டு இலை ரூ.6-க்கும், ரூ.2-க்கு விற்பனை செய்யப்பட்ட டிபன் இலை ரூ.4-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

வாழை இலைகளின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தாலும், தேவை அதிகளவு இருப்பதால் பொதுமக்கள் மற்றும் கடைக்காரர்கள் வேறு வழியின்றி இதனை வாங்கி செல்கின்றனர். இது ஒருபுறம் இருக்க இந்த விலை உயர்வு காரணமாக நல்ல விலை கிடைப்பதால் வாழையை சாகுபடி செய்த விவசாயிகள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர். 

மேலும் செய்திகள்