பிரெஞ்ச் கயானாவில் இருந்து ‘ஜிசாட்-31’ செயற்கைகோள் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது - 15 ஆண்டுகள் தகவல் தொடர்பு சேவை வழங்கும்

பிரெஞ்ச் கயானாவில் இருந்து ‘ஜிசாட்-31’ செயற்கைகோள் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. இது, 15 ஆண்டுகள் தகவல் தொடர்பு சேவை வழங்கும்.

Update: 2019-02-06 23:15 GMT
பெங்களூரு,

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோ, தகவல் தொடர்பு சேவைக்காக ‘ஜிசாட்-31’ செயற்கை கோளை உருவாக்கியது. இது இந்தியாவின் 40-வது தகவல் தொடர்பு செயற்கை கோள் என்ற பெருமையை பெறுகிறது.

இதன் எடை 2 ஆயிரத்து 535 கிலோ ஆகும். அதிக எடை கொண்ட செயற்கை கோள்கள், வழக்கமாக தென் அமெரிக்காவில் உள்ள பிரெஞ்ச் கயானாவில் இருந்து கனரக ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்படுவது வழக்கம்.

அதன்படி இந்த செயற்கை கோளையும் பிரெஞ்ச் கயானாவின் கொரூவ் நகரில் இருந்து ஐரோப்பிய ராக்கெட்டான ‘ஏரியன்-5’ மூலம் விண்ணில் செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

6-ந் தேதி விண்ணில் செலுத்தப்படும் எனவும் இஸ்ரோ தரப்பில் அறிவிக்கப்பட்டது. இதற்காக ‘ஜிசாட்-31’ செயற்கை கோள், அங்கு கொண்டு செல்லப்பட்டது.

திட்டமிட்டபடி அந்த செயற்கை கோள் ஏரியன்-5 ராக்கெட் மூலம் கொரூவ் நகரின் ஏரியன் ஏவுதள வளாகத்தில் இருந்து நேற்று இந்திய நேரப்படி அதிகாலை 2.31 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது.

இந்த செயற்கை கோள் சரியாக 42 நிமிடங்களில் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது.

இதை கொரூவ் சென்றுள்ள இஸ்ரோவின் சதீ‌ஷ் தவான் விண்வெளி மைய இயக்குனர் எஸ்.பாண்டியன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

அப்போது அவர், ‘‘ஏரியன்-5 ராக்கெட் மூலம் ஜிசாட்-31 செயற்கைகோள் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டிருப்பது எனக்கு மகிழ்ச்சியைத் தந்துள்ளது. இதற்காகவும், அந்த செயற்கைகோள் சுற்றுப்பாதையில் துல்லியமாக நிலை நிறுத்தப்பட்டதற்காகவும் ஏரியன்ஸ்பேஸ் விஞ்ஞானிகளுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்’’ என குறிப்பிட்டார்.

இனி வரும் நாட்களில் பல கட்டங்களாக ஜிசாட்-31 செயற்கைகோளை பூமத்திய ரேகைக்கு 36 ஆயிரம் கி.மீ. மேலே ‘ஜியோஸ்டே‌ஷனரி’ சுற்றுப்பாதையில் விஞ்ஞானிகள் நிலை நிறுத்துவார்கள்.

இந்த செயற்கை கோளின் ஆயுள் 15 ஆண்டுகள் ஆகும். எனவே இது 15 ஆண்டு காலத்துக்கு விசாட் நெட்வொர்க், டெலிவி‌ஷன் இணைப்பு, டிஜிட்டல் செயற்கைகோள் செய்தி சேகரிப்பு, டி.டி.எச். டெலிவி‌ஷன் சேவை, செல்போன் சேவை ஆகியவற்றை வழங்கும்.

அரேபியக்கடல், வங்காள விரிகுடா, இந்தியப்பெருங்கடல் ஆகியவற்றின் பெரும்பகுதிகளை உள்ளடக்கிய பெருங்கடல் பகுதி தகவல் பரிமாற்றம் செய்யவும் ‘ஜிசாட்-31’ செயற்கைகோள் உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்