பணிக்கு திரும்பிய ஆசிரியர்–அரசு ஊழியர்கள் மீதான நடவடிக்கையை திரும்ப பெற வேண்டும் ஜாக்டோ–ஜியோ அமைப்பினர் கோரிக்கை
பணிக்கு திரும்பிய ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்கள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை திரும்ப பெற வேண்டும் என்று சிவகங்கை மாவட்ட ஜாக்டோ–ஜியோ அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிவகங்கை,
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ–ஜியோ மாவட்ட உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் கூட்டம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் முத்துப்பாண்டியன், ஜோசப் சேவியர் ஆகியோர் தலைமையில் சிவகங்கையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர்கள் செல்வக்குமார், முத்துச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாநில உயர் மட்டக்குழு உறுப்பினர்கள் சங்கர், இளங்கோ உள்பட உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் 22–ந் தேதி முதல் தொடர் வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டங்களில் ஜாக்டோ–ஜியோ அமைப்பினர் ஈடுபட்டு வந்தனர். இந்தநிலையில் மாணவர்கள் நலன் கருதியும், தமிழக முதல்–அமைச்சரின் வேண்டுகோளை ஏற்றும் இந்த போராட்டம் 30–ந் தேதி வாபஸ் பெறப்பட்டது.
போராட்டத்தை கைவிட்டு பள்ளிக்கு திரும்பிய ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் மற்றும் கைதாகி சிறை சென்று திரும்பியவர்களுக்கு தற்காலிக பணியிடை நீக்க உத்தரவை மாவட்ட நிர்வாகம் வழங்கி உள்ளது. இந்த உத்தரவுகள் அனைத்தையும் விலக்கி கொண்டு அனைவரையும் அவர்கள் ஏற்கனவே பணியாற்றிய அதே இடத்தில் பணியாற்ற முதல்–அமைச்சர் அனுமதி வழங்க வேண்டும். பணிக்கு திரும்பிய ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்கள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை உடனடியாக திரும்ப பெற வேண்டும். மாநில கூட்டமைப்பு சார்பில் தமிழக அமைச்சர்கள் மற்றும் துறை செயலாளர்களுடன் நடந்த பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும் முதல்–அமைச்சரை சந்திக்க திட்டமிட்டுள்ளதாலும், அதுவரை மாவட்ட நிர்வாகம் எடுத்து வரும் நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் மற்றும் முதன்மைக்கல்வி அலுவலரை இக்கூட்டமைப்பு கேட்டுக்கொள்கிறது.
மேலும் போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்று மீண்டுள்ள 62 அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்குவதோடு, அவர்கள் குடும்பங்கள் பாதிக்காத வகையில் உதவிகளை அனைத்து உறுப்பினர்களும் மேற்கொள்வது என்பது உள்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.