மணப்பாறை அருகே வாகனம் மோதி காட்டெருமை சாவு

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த காவல்காரன்பட்டி அருகே உள்ள கருப்பரெட்டியபட்டி வனப்பகுதியில் அதிக அளவில் காட்டெருமைகள் உள்ளன.

Update: 2019-02-06 22:45 GMT
மணப்பாறை,

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த காவல்காரன்பட்டி அருகே உள்ள கருப்பரெட்டியபட்டி வனப்பகுதியில் அதிக அளவில் காட்டெருமைகள் உள்ளன. இந்த காட்டெருமைகள் உணவு மற்றும் தண்ணீரைத் தேடி கிராமங்களை நோக்கி படையெடுத்து வரும் சம்பவம் அடிக்கடி நடைபெற்று வருகிறது.

இவ்வாறு வரும் காட்டெருமைகள் வாகனங்கள் மோதி உயிரிழக்கும் சம்பவமும் தொடர்கிறது. இந்நிலையில் நேற்று காலை காவல்காரன்பட்டியில் சாலையை கடந்த 2 வயது மதிக்கத்தக்க காட்டெருமை அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் படுகாயம் அடைந்து நடக்க முடியாமல் தவழ்ந்தபடி சென்றது. இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் இது பற்றி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று காட்டெருமையை அருகில் உள்ள தோட்டத்தில் மரத்தின் அருகே நகர்ந்து செல்லாமல் கட்டி வைத்தனர். மேலும் காட்டெருமைக்கு தண்ணீர் மற்றும் உணவு கொடுத்தனர். ஆனால் அவை எதையும் சாப்பிடாமல் காட்டெருமை வலியால் துடித்துக் கொண்டே இருந்தது.

மேலும் கால்நடை மருத்துவரும் வரவழைக்கப்பட்டு உடனடியாக சிகிச்சையும் அளிக்கப்பட்டது. எனினும் காட்டெருமை சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்தது. பின்னர் உடல் கால்நடைமருத்துவர்கள் மூலம் பரிசோதனை செய்யப்பட்டு புதைக்கப்பட்டது. காட்டெருமைகள் தொடர்ந்து வாகனங்களில் மோதி உயிரிழக்கும் சம்பவம் அதிகரித்து வரும் நிலையில் அதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்களும், வனவிலங்கு ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்