திருமழிசையில் துணைக்கோள் நகரம் அமைக்க நிலம் அளவிடும் பணி தொடக்கம்

திருமழிசையில் துணைக்கோள் நகரம் அமைக்க நிலம் அளவிடும் பணி தொடங்கியது.

Update: 2019-02-06 23:00 GMT

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த திருமழிசையில் 1,500 ஏக்கரில் துணைக்கோள் நகரம் அமைக்க தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் கடந்த 1996–ம் ஆண்டு திட்டமிட்டது. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து இந்த திட்டம் பாதியில் கைவிடப்பட்டது. இந்த நிலையில் கடந்த 2011–ம் ஆண்டு மீண்டும் துணைக்கோள் நகரம் அமைக்கப்படும் என அப்போதைய முதல்–அமைச்சர் ஜெயலலிதா 110 விதியின் கீழ் அறிக்கை வெளியிட்டார்.

அதில் திருமழிசையில் துணைக்கோள் நகரம், குடிநீர் வசதி, கழிவுநீர் அகற்றும் வசதி, சாலை வசதி, மழை நீர் வடிகால் கால்வாய், தெருவிளக்குகள் வசதி, சமுதாயக்கூடம், பள்ளி, மருத்துவமனைகள், பஸ் நிலையம், பூங்கா விளையாட்டு திடல் போன்ற அனைத்து அடிப்படை வசதிகளும் கொண்டு அமைக்கப்படும் எனவும் இந்த நகருக்கு 12 ஆயிரம் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர் மற்றும் குறைந்த நடுத்தர வருவாய் பிரிவினர் எளிதில் வாங்கி பயன்பெறும் விலையில் அமைக்கப்படும் என தெரிவித்தார்.

இதற்காக திருமழிசை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் கையகப்படுத்த முடிவு செய்யப்பட்டு பொதுமக்களுக்கு அதற்கான தொகை வழங்கவும் 167 ஏக்கர் நிலம் வரை கையகப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது.ஆனால் 70 ஏக்கர் வரை நிலம் தர மறுப்பு தெரிவித்த விவசாயிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஐகோர்ட்டில் தடை ஆணை பெற்றனர். இந்த நிலையில் ஒப்புதல் பெறப்பட்ட விவசாயிகளின் நிலத்தில் வீட்டு வசதி வாரிய அதிகாரிகள் பணிகளை மேற்கொண்டனர். கடந்த மாதம் 18–ந் தேதியன்று வீட்டு வசதி வாரிய அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறையினர் திருமழிசை பகுதியில் விவசாய நிலங்களை கையகப்படுத்த அளவீடு செய்ய வந்தனர்.

அப்போது பொதுமக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாய நிலங்களை கையகப்படுத்தக்கூடாது, நில அளவீடு செய்யக்கூடாது என வலியுறுத்தி கண்டன கோ‌ஷங்களை எழுப்பினார்கள். அப்போது அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

இந்த நிலையில் நேற்று தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறையினர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் குத்தம்பாக்கம் பகுதியில் ஏற்கனவே நிலம் வழங்க ஓப்புதல் அளித்து பணம் பெற்ற 45 ஏக்கர் விவசாய நிலங்களில் அளவீடு செய்யும் பணியை தொடங்கினர்.. இந்த பணி தொடர்ந்து நடைபெறும் என அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்