வனத்துறையில் 3 ஆயிரம் காலிப்பணியிடங்கள் படிப்படியாக நிரப்பப்படும்: பயிர்க்கடன் தள்ளுபடிக்காக மாநில அரசு ரூ.1,611 கோடி விடுவித்துள்ளது - சட்டசபை கூட்டு கூட்டத்தில் கவர்னர் வஜூபாய் வாலா தகவல்

வனத்துறையில் காலியாக உள்ள 3 ஆயிரம் பணியிடங்கள் படிப்படியாக நிரப்பப்படும் என்றும், பயிர்க்கடன் தள்ளுபடிக்காக மாநில அரசு ரூ.1,611 கோடியை விடுவித்துள்ளது என்றும் சட்டசபை கூட்டு கூட்டத்தில் கவர்னர் வஜூபாய் வாலா தெரிவித்தார்.

Update: 2019-02-06 22:00 GMT
பெங்களூரு, 

பெங்களூரு விதான சவுதாவில் நேற்று இந்த ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. பரபரப்பான அரசியல் சூழ்நிலைகளுக்கு இடையே நேற்று இந்த சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. இது இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் சட்டசபையின் கூட்டு கூட்டத்தில் கவர்னர் வஜூபாய் வாலா கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் பேசும்போது கூறியதாவது:-

கர்நாடக சட்டமன்ற தலைவர், சபாநாயகர் ரமேஷ் குமார், முதல்-மந்திரி குமாரசாமி, எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பா மற்றும் மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் நான் இந்த சட்டசபை கூட்டு கூட்டத்திற்கு வரவேற்கிறேன்.

நான் அனைவருக்கும் முதலில் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த கூட்டம் அர்த்தமுள்ளதாகவும், மாநிலத்தில் உள்ள பல்வேறு பிரச்சினைகள் குறித்தும், சவால்களை எதிர்கொள்ளும் திட்டங்கள் குறித்தும் ஆலோசித்து நல்ல திட்டங்களையும், சேவைகளையும் அமல்படுத்தும் என்று நம்புகிறேன்.

மாநிலத்தில் பல்வேறு இடங்களில் கடந்த ஆண்டு கடுமையான வறட்சி நிலவியது. 100 தாலுகாக்களில் சம்பா சாகுபடியும், 156 தாலுகாக்களில் குறுவை சாகுபடியும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த அரசு உரிய நேரத்தில் குடிநீர் தேவைப்படுபவர்களுக்கு குடிநீரையும், கால்நடைகளுக்கு தீவனங்களையும் வழங்கி உள்ளது. மேலும் வறட்சி பாதிக்கப்பட்ட தாலுகாக்களில் வேலைவாய்ப்புகளையும் உருவாக்கி உள்ளது.

பிரச்சினைகளை சந்திக்கும் நேரங்களில் அனைத்து மாவட்டங்களுக்கு தேவையான நிதி வழங்கப்பட்டுள்ளது. தீவன தட்டுப்பாட்டை போக்க 8.11 லட்சம் விவசாயிகளுக்கு தீவன உற்பத்திக்கான விதைகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 30 லட்சம் டன் தீவனம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு முன்பு வறட்சியால் பாதிக்கப்பட்ட கிராமப்புற பகுதிகளில், மிகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கி கொடுக்கப்பட்டது. இவ்வாறாக கடந்த ஆண்டு(2018) ஏப்ரல் 1-ந் தேதி முதல் இந்த ஆண்டு(2019) ஜனவரி மாதம் 31-ந் தேதி வரை மகாத்மா காந்தி 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் 8.12 கோடி மனித வேலை நாட்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் 18.56 லட்சம் குடும்பத்தினர் பயனடைந்துள்ளனர். மேலும் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், 100 வேலை திட்டத்திற்கான கார்டு வைத்திருப்பவர்களுக்கு 150 நாட்கள் வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த அரசு, தொடர்ச்சியாக வறட்சியால் பாதிக்கப்பட்டு வரும் பகுதிகளில் வறட்சியை போக்க தேவையான தொலைநோக்கு திட்டங்களை அறிந்து வைத்திருக்கிறது. மேலும் மழை நீர் சேகரிப்பு, சிறிய நீர்ப்பாசன முறை ஆகியவற்றை நாம் ஊக்கப்படுத்த வேண்டும்.

இயற்கை விவசாயம், இஸ்ரேல் விவசாய முறையை நடைமுறைப்படுத்துதல் போன்ற விவசாய நடைமுறைகளில் உள்ள சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் பணிகளை முடுக்கி விட வேண்டும். குறிப்பாக இஸ்ரேல் விவசாய முறையை செயல்படுத்த தனி அமைப்பு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த அரசு, ‘ஹசிரு கர்நாடகா’ திட்டம் மூலம் மாநிலம் முழுவதும் பசுமை புரட்சியை மேற்கொள்ள ஆரம்பித்துவிட்டது. இதன் நோக்கமே பொதுமக்களின் பங்கேற்போடு மரக்கன்றுகளை நட்டு வளர்ப்பதுதான். இந்த ஆண்டு பருவமழை தொடங்குவதற்குள் மாநிலம் முழுவதும் 6.52 கோடி மரக்கன்றுகளை நட வேண்டும்.

இந்த அரசின் ஆறுகள் பாதுகாப்பு நடவடிக்கை மூலம் ஆறுகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. 2018-2019-ம் ஆண்டில் வனத்துறையில் காலியாக இருந்த 666 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டு உள்ளன. இன்னும் 3,085 கூடுதல் காலிப்பணியிடங்கள் வனத்துறையில் உள்ளன. அந்த பணியிடங்கள் படிப்படியாக நிரப்பப்படும்.

இந்த அரசு விவசாயக்கடன் தள்ளுபடி திட்டத்தை செயல்படுத்தி விட்டது. மேலும் புதிய பயிர்க்கடன் தள்ளுபடியில் ஆர்வம் செலுத்தி வருகிறது. கடந்த மாதம்(ஜனவரி) 31-ந் தேதி வரை பயிர்க்கடன் தள்ளுபடிக்காக ரூ.1,611 கோடியை இந்த விடுவித்துள்ளது. இதன்மூலம் 3.28 லட்சம் விவசாயிகளின் விவசாயக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை உடனடியாக செயல்படுத்துமாறு கூட்டுறவு வங்கிகள் மற்றும் வணிக வங்கிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

விவசாய சந்தை சீர்திருத்தங்கள் மூலம் விவசாயிகளுக்கான லாபம் 38 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆன்லைன் மற்றும் ஒருங்கிணைந்த சந்தை மூலம் 5.48 கோடி டன் விவசாய பொருட்கள் கையாளப்பட்டுள்ளன. இதன் மதிப்பு ரூ.1.21 லட்சம் கோடி ஆகும். மேலும் இந்த அரசு விவசாயிகளின் நலன் கருதியும், அவர்கள் பயன் பெறவும் விவசாய பொருட்களை பாதுகாக்கவும், அதன் மதிப்பை கூட்டவும், அவற்றை சுத்தப்படுத்தி தரம் உயர்த்தவும், பார்சல் செய்யவும் கதிரியக்க பிரிவுகளை தொடங்கி வருகிறது.

இந்த அரசு பட்டு உற்பத்தியில் பிரதான நிலையில் உள்ளது. சுமார் 1.30 லட்சம் விவசாய குடும்பத்தினர், 7 ஆயிரம் நெசவு குடும்பத்தினர் பட்டுத்தொழிலை நம்பி உள்ளனர். அவர்களுக்காகவும், பட்டு விவசாயத்தை மேம்படுத்தவும் அதில் புதிய தொழில்நுட்பங்களை புகுத்த திட்டமிடப்பட்டு இருக்கிறது. மேலும் அவர்களுக்கான உள்கட்டமைப்பு வசதிகளையும் செய்து கொடுக்க அரசு தயாராகி வருகிறது.

2018-2019-ம் ஆண்டில் பட்டுக்கூடுவின் விலை மிகவும் வீழ்ச்சி அடைந்தது. அதனால் விவசாயிகளின் ஆர்வத்தின் அடிப்படையில் பட்டுக்கூடுகளுக்கு ஆதரவு விலையை நிர்ணயிக்க அரசு திட்டமிட்டு வருகிறது.

கர்நாடக மாநில கடல் எல்லை 320 கிலோ மீட்டருக்கு பரந்து விரிந்துள்ளது. கர்நாடகத்தில் 6 லட்சம் டன் மீன்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. உயர்தர ஏற்றுமதி மூலம் மீன்வளத்துறைக்கு அதிக லாபம் கிடைக்கும் என்றும், வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் என்பதால் இந்த அரசு மீன்வளத்துறை மீது கவனம் செலுத்துகிறது.

மீன்வளத்துறையில் முன்னேற்றம் காண அதற்கு தகுந்தபடி இன்னும் பல திட்டங்கள், விதிமுறைகளை அதில் புகுத்த அரசு முடிவு செய்துள்ளது. ‘மத்ஸ்யா ஜொபசனெ யோஜனெ’ திட்டத்தின் கீழ் மாநிலத்தின் 10 குளிரூட்டப்பட்ட குடோன்கள் தொடங்கப்பட்டுள்ளன. இவற்றில் மீன்களை பாதுகாப்பாக வைத்து பதப்படுத்தி வைக்க முடியும்.

தோட்டக்கலை பயிர் விளைச்சலை அதிகப்படுத்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அதற்காக இந்த ஆண்டு தகுதி வாய்ந்த விவசாயிகளின் மூலம் தோட்டக்கலை பயிர் விளைச்சல் 42 ஆயிரம் ஹெக்டேராக உயர்த்தப்பட உள்ளது. இதற்காக 51.49 லட்சம் விதைகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு கவர்னர் வஜூபாய் வாலா பேசினார்.

தொழில் கட்டமைப்பில் கர்நாடகம் முதலிடம் - கவர்னர் பெருமிதம்

சட்டசபையில் கவர்னர் வஜூபாய்வாலா பேசியதாவது:-

இந்தியாவில் தகவல் தொழில்நுட்பம், உயிரி தொழில்நுட்பங்களின் தலைமையிடமாக கர்நாடகம் உள்ளது. இந்திய அரசின் தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டு துறை சார்பில் வெளியிடப்பட்ட புள்ளி விவரத்தில் தொழில் கட்டமைப்பில் கர்நாடகம் முதல் இடத்தில் உள்ளது. பெங்களூருவின் புதிய தொழில் மதிப்பு தற்போது 19 பில்லியன் டாலர் (ஒரு பில்லியன் என்பது 100 கோடி, நேற்றைய நிலவரப்படி ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ.71.54) என்ற அளவில் உள்ளது. வருகிற 2025-ம் ஆண்டு கணக்குப்படி மாநிலத்தில் தொடங்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை தொடும். அமெரிக்கா, இங்கிலாந்து, இஸ்ரேல், பிரான்சு மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளை சேர்ந்த சில நிறுவனங்களுடன் கைகோர்த்து 58 புது கண்டுபிடிப்புகளுக்கான ஆய்வு மையங்கள் தொடங்கப்பட உள்ளது.

* 2018-ல் இருந்து தொடர்ந்து தொழில் முதலீட்டை பெறுவதில் கர்நாடகம் முதலிடத்தில் உள்ளது. 2014-19 தொழில் கொள்கை மூலம் 1,958 திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ரூ.3.49 லட்சம் கோடி முதலீடு கிடைப்பதுடன், 10.28 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும். ‘சீனாவுடன் தொழில் போட்டி’ என்ற திட்டத்தின் கீழ் 9 மாவட்டங்களின் நிலையை கருத்தில் கொண்டு அது சம்பந்தமான தொழில்களை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

* 2018-19 ஆண்டில் 2.50 லட்சம் பேருக்கு தொழில் பயிற்சி நிறுவனங்கள் மூலம் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.


மேலும் செய்திகள்