சிவக்குமார சுவாமி, ஜார்ஜ் பெர்னாண்டஸ் மறைவுக்கு கர்நாடக சட்டசபையில் இரங்கல் - ஏழை குழந்தைகளுக்கு கல்வி கொடுத்தார் என மடாதிபதிக்கு புகழாரம்
சிவக்குமார சுவாமி, ஜார்ஜ் பெர்னாண்டஸ் ஆகியோரின் மறைவுக்கு கர்நாடக சட்டசபையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. மடாதிபதி சிவக்குமார சுவாமி, ஏழை குழந்தைகளுக்கு கல்வி வசதியை செய்து கொடுத்தார் என்று புகழாரம் சூட்டினர்.
பெங்களூரு,
கர்நாடக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் பெங்களூரு விதான சவுதாவில் நேற்று தொடங்கியது. இந்த கூட்டத்தில் கவர்னர் உரையாற்றினாா். அதன் பிறகு சபாநாயகர் ரமேஷ்குமார், மறைந்த சித்தகங்கா மடாதிபதி சிவக்குமார சுவாமி, முன்னாள் மத்திய மந்திரி ஜார்ஜ் பெர்னாண்டஸ் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தத்து எல்லப்பா ஹக்யாகோல், சாலேர் எஸ்.சித்தப்பா ஆகியோருக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானத்தை தாக்கல் செய்தார்.
அதன் மீது முதல்-மந்திரி குமாரசாமி பேசியதாவது:-
சித்தகங்கா மடாதிபதி 89 ஆண்டுகள் சித்தகங்கா மடத்தின் மடாதிபதியாக நீண்ட காலம் பணியாற்றினார். அவர் ஏழை குழந்தைகளுக்கு கல்வி, உணவு, இருப்பிட வசதி செய்து கொடுத்தார். மடத்தில் 10 ஆயிரம் குழந்தைகளுக்கு இந்த வசதிகளை அவர் செய்து கொடுத்தார்.
அனைத்து சாதிகளை சேர்ந்த குழந்தைகளுக்கும் அவர் கல்வி வசதியை செய்து கொடுத்தார். அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களும் மடத்திற்கு சென்று அவரிடம் ஆசி பெற்றனர். ஆனால் அவர் என்றும் அரசியலில் தலையிட்டது இல்லை. அரசியலை அவர் ஒதுக்கியே வைத்திருந்தார்.இந்த சமுதாயத்திற்கு அவர் அளித்த சேைவ அபாரமானது. அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த லட்சக்கணக்கான பக்தர்கள் நேரில் வந்தனர். முன்னாள் மத்திய மந்திரி ஜார்ஜ் பெர்னாண்டஸ் கர்நாடகத்தை சேர்ந்தவர். போராட்ட குணம் கொண்டவர்.
மும்பைக்கு சென்று அங்கு தொழிலாளர்களின் நலனுக்காக குரல் கொடுத்தார். அவசரநிலை பிரகடனத்திற்கு எதிராக அவர் போராடினார். கொங்கன் ரெயில்வேயை அவர் தான் உருவாக்கினார். மிக எளிமையாக,. நேர்மையாக இருந்து இந்த நாட்டுக்கு அபரிமிதமான சேவையை ஆற்றிவிட்டு சென்றுள்ளார். இவ்வாறு குமாரசாமி கூறினார்.
இதைதொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பா பேசியதாவது:-
சிவக்குமார சுவாமி 111-வயது வரை நிரம்பிய வாழ்க்கையை வாழ்ந்துவிட்டு நம்மை விட்டு சென்றுள்ளார். இந்த நாட்டுக்கே முன்மாதிரியாக வாழ்ந்துள்ளார். ஏழைகளின் குழந்தைகளுக்கு கல்வி வசதியை கொடுத்தார்.
மடத்தில் 10 ஆயிரம் குழந்தைகளுக்கு உணவு, இருப்பிட வசதி கொடுத்து கல்வி தானத்தை வழங்கினார். அவரது சமூக சேவைகளை பார்த்து, பலர் சேவையாற்ற கற்றுக்கொண்டனர். அவரை நடமாடும் கடவுள் என்றே மக்கள் கருதினர். அவர் நம்மை விட்டு பிரிந்து சென்றது வேதனை ஏற்படுத்துவதாக உள்ளது.
முன்னாள் மத்திய மந்திரி ஜார்ஜ் பெர்னாண்டஸ், தொழிலாளர்களின் நலனுக்காக போராடினார். கர்நாடகத்தில் பிறந்து மும்பைக்கு சென்று அங்கு பெரிய தலைவராக உருவெடுத்தார். அவர் அரசியலில் மிக எளிமையாக, நேர்மையாக இருந்தார். இவ்வாறு எடியூரப்பா கூறினார்.
துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் பேசியதாவது:-
சிவக்குமார சுவாமி நாட்டுக்கு முன்மாதிரியாக இருந்தார். மடத்தில் தினமும் 10 ஆயிரம் குழந்தைகளுக்கு உணவு, இருப்பிட வசதிகளை வழங்கினார். இலவச கல்வி வசதியை ஏற்படுத்தி கொடுத்தார். அவர் அரசின் உதவிகளை கேட்கவில்லை. அவர் வாழ்ந்த காலத்தில் நாம் வாழ்ந்ேதாம் என்பதே நமக்கு பெருமை.
நாட்டில் இதுவரை சுமார் 44 பேருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. சிவக்குமார சுவாமிக்கு அந்த பாரத ரத்னா விருது வழங்க வேண்டும். முன்னாள் மத்திய மந்திரி ஜார்ஜ் பெர்னாண்டஸ் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக போராடியவர். தான் மேற்கொண்ட போராட்டத்தில் அவர் வெற்றியும் கண்டார்.
பொக்ரான் அணுகுண்டு சோதனையில் அவரது பங்கு மிக முக்கியமானது. இவ்வாறு பல்வேறு சாதனைகளை புரிந்தார். அவர் நேர்மையான, எளிமையான வாழ்க்கையை வாழ்ந்தார். இவ்வாறு பரமேஸ்வர் பேசினார்.
முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா பேசியதாவது:-
சிவக்குமார சுவாமி தொடர்ந்து 89 ஆண்டுகள் ஆன்மிக சேவையில் ஈடுபட்டார். யாரும் செய்ய முடியாத சாதனையை அவர் செய்துள்ளார். பசவண்ணரின் சமத்துவ கொள்கையை அவரிடம் காண முடிந்தது. 10 ஆயிரம் குழந்தைகளுக்கு மடத்தில் தினமும் உணவு வழங்கி கல்வி தானமும் செய்தார்.
அவரது மரணம் அடைந்தபோது உடலுக்கு அஞ்சலி செலுத்த லட்சக்கணக்கான மக்கள் வந்திருந்தனர். ஒரு ஆன்மிகவாதிக்கு இவ்வளவு பெரிய அளவுக்கு மக்கள் கூட்டம் வந்து அஞ்சலி செலுத்தியது நாட்டில் வேறு எங்கும் நடக்காத நிகழ்வு. இது ஒரு சாதனை ஆகும்.
அவரிடம் அனைத்துக்கட்சிகளின் தலைவர்களும் வந்தனர். அவர் அனைவரையும் சமமாக பார்த்தார். அரசியலை தூரமாகவே வைத்தார். அவர் எப்போதும் அரசியல் பேசியது இல்லை. சாதிகளற்ற, அரசியலற்ற மடமாக சித்தகங்கா மடம் திகழ்ந்தது.
முன்னாள் மத்திய மந்திரி ஜார்ஜ் பெர்னாண்டஸ் மரணம் அடைந்துள்ளார். நான் அரசியலில் பல்வேறு பதவிகளை அடைந்ததில் அவரது பங்கும் உள்ளது. நான் 1983-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டேன். தேர்தல் செலவுக்கு என்னிடம் பணம் இல்லை.
அவர் ரூ.10 ஆயிரம் எனக்கு கொடுத்தார். அந்த காலத்தில் ரூ.10 ஆயிரம் என்றால் பெரிய தொகை ஆகும். கர்நாடகத்தில் பிறந்து மும்பைக்கு சென்று, அங்கு தொழிலாளர்களை ஒருங்கிணைத்து அவர்களின் உரிமைகளுக்காக ஜார்ஜ் பெர்னாண்டஸ் போராடினார். அதில் அவர் வெற்றியும் கண்டார்.
தொழிலாளர் தொடர்பாக போராட்டத்திற்கு அவர் அழைப்பு விடுத்தால், மும்பை நகரமே முடங்கிவிடும். அந்த அளவுக்கு சக்தி வாய்ந்த தலைவராக இருந்தார். மிக எளிமையாக, நேர்மையாக அரசியலில் இருந்தவர். அவர் கடைசி காலத்தில் நினைவு இழந்து பெரிதும் பாதிக்கப்பட்டார். இவ்வாறு சித்தராமையா கூறினார்.