முதல் நாள் சட்டசபை கூட்டத்தில் 9 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்கவில்லை: பா.ஜனதா உத்தரவின் பேரில் புறக்கணிப்பா?-பரபரப்பு
முதல் நாள் சட்டசபை கூட்டத்தில் காங்கிரசை சேர்ந்த 9 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்கவில்லை. பா.ஜனதாவின் உத்தரவின் பேரில் அவர்கள் சட்டசபை கூட்டத்தை புறக்கணித்து இருப்பதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு,
கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தி வருகிறது. இதில் காங்கிரசை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் தங்களுக்கு மந்திரி பதவி கிடைக்காத காரணத்தால் கடும் அதிருப்தியில் உள்ளனர். அவர்களை ‘ஆபரேஷன் தாமரை’ மூலம் தங்கள் பக்கம் இழுக்க பா.ஜனதா முயற்சி செய்து வருகிறது. மேலும் 12 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மூலம் கூட்டணி அரசு மீது நம்பிக்கை இல்லாத தீர்மானம் கொண்டு வர பா.ஜனதா முயற்சி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அல்லது 12 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களையும் ராஜினாமா செய்ய வைக்க பா.ஜனதா தீவிர நடவடிக்கையில் இறங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதனால் காங்கிரசை சேர்ந்த அனைத்து எம்.எல்.ஏ.க்களும் கட்டாயம் கர்நாடக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்க வேண்டும் என்று காங்கிரஸ் கொறடா உத்தரவிட்டுள்ளார். இத்தகைய பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நேற்று காலை 11 மணி அளவில் கர்நாடக பட்ஜெட் கூட்டம் தொடங்கியது.
இந்த ஆண்டின் முதல் நாள் சட்டசபை கூட்டம் என்பதால், கவர்னர் வஜூபாய்வாலா உரையாற்றினார். ஆனால் முதல் நாள் கூட்டத்தில் காங்கிரசை சேர்ந்த 9 எம்.எல்.ஏ.க்களும், 2 சுயேச்சை எம்.எல்.ஏ.க்களும் கலந்துகொள்ளவில்லை.
அதாவது, ரமேஷ் ஜார்கிகோளி (கோகாக் தொகுதி), கணேஷ் (காம்பளி), நாகேந்திரா (பல்லாரி புறநகர்), உமேஷ் ஜாதவ் (சிஞ்சோலி), மகேஷ் கமடள்ளி (அதானி), பி.சி.பட்டீல் (ஹிரேகெரூர்), டாக்டர் சுரேஷ்குமார் (சிக்பள்ளாப்பூர்), ராமலிங்கரெட்டி (பி.டி.எம். லே-அவுட்), சவுமியா ரெட்டி (ஜெயநகர்) ஆகிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும், சுயேச்சைகளான சங்கர் (ராணிபென்னூர்), நாகேஷ் (முல்பாகல்) ஆகியோரும் கலந்துகொள்ளவில்லை. 9 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கொறடா உத்தரவை மீறி சட்டசபை கூட்டத்தில் பங்கேற்காமல் இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அத்துடன் பா.ஜனதாவின் உத்தரவின் பேரிலேயே அவர்கள் 11 பேரும் சட்டசபை கூட்டத்தை புறக்கணித்து இருப்பதாகவும், இதன் மூலம் பட்ஜெட்டை தாக்கல் செய்யவிடாமல் இருக்கவும், அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து கூட்டணி அரசுக்கு நெருக்கடி கொடுக்கவும் பா.ஜனதா திட்டமிட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. இது கர்நாடக அரசியல் களத்தில் மேலும் அனலை ஏற்படுத்தி உள்ளது.
அதே வேளையில் சட்டசபை கூட்டத்தில் தொடர்ந்து 9 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் பங்கேற்காத பட்சத்தில், அவர்களிடம் விளக்கம் கேட்கவும் காங்கிரஸ் கொறடா முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.