திருக்கோவிலூர் தொகுதியில், சேதமடைந்த சாலைகளை சீரமைக்க கோரி தி.மு.க.வினர் சாலை மறியல்
திருக்கோவிலூர் தொகுதியில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க கோரி தி.மு.க.வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காட்டுப்பையூர், வடமலையனூர், வில்லிவலம், கொரக்கந்தாங்கல், டி.கொடியூர் மற்றும் அடுக்கம்-தண்டரை ஆகிய கிராமங்களில் சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மற்றும் தி.மு.க.வினர் சேதமடைந்துள்ள அனைத்து சாலைகளையும் சீரமைக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை வைத்தனர். இருப்பினும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த தி.மு.க.வினர் நேற்று காலை 11 மணிக்கு திருக்கோவிலூர் அடுத்த ஆவிகொளப்பாக்கம் கூட்டுரோடு பகுதியில் திரண்டனர். பின்னர் அவர்கள் பொன்முடி எம்.எல்.ஏ. தலைமையில் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதியில் சேதமடைந்து கிடக்கும் கிராம சாலைகளை உடனடியாக சீரமைக்க கோரியும், அனைத்து கிராமங்களுக்கும் பேருந்து வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என்று கண்டன கோஷங்களை எழுப்பியபடி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்த நெடுஞ்சாலைத்துறை, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க.வினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி, ஒரு மாதத்துக்குள் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்தனர். இதனை ஏற்ற தி.மு.க.வினர் மறியலை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மறியல் போராட்டத்தில் தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் தங்கம், ரவிச்சந்திரன், பிரபு, விஸ்வநாதன், தொகுதி பொறுப்பாளர் டி.என்.முருகன், பொதுக்குழு உறுப்பினர் செல்வராஜ், நகர செயலாளர் கோபி, முன்னாள் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் குணா, முன்னாள் கவுன்சிலர் வினோபா, கலைவாணி சக்திவேல், கோபு, கோவிந்த், ரேவதி, மகேஷ், தொ.மு.ச. சரவணன், மலையரசன், வெங்கட், பூபதி, நந்து, முரளி, மாவட்ட பிரதிநிதி கந்தன்பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.