வனக்காப்பாளரை கொலை செய்த நண்பருக்கு ஆயுள்தண்டனை
வனக்காப்பாளரை கொலை செய்த நண்பருக்கு ஆயுள்தண்டனை விதித்து விருத்தாசலம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
விருத்தாசலம்,
காட்டுமன்னார்கோவிலில் உள்ள விஸ்வநாதன் நகரை சேர்ந்தவர் கணேசன்(வயது 55). வனக்காப்பாளர். அதே பகுதியை சேர்ந்தவர் கொத்தனார் பாவாடை(54). இருவரும் நண்பர்கள். கணேசனுக்கு பாவாடை வீடு கட்டி கொடுத்தார். இதில் அவர் பாவாடைக்கு பணம் கொடுக்க வேண்டியது இருந்தது. இதனால் கணேசனை அடிக்கடி சந்தித்து, தனக்கு சேர வேண்டிய பணத்தை தருமாறு அவர் கேட்டு வந்தார். இந்த நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14-ந்தேதி ராமாபுரம் அடுத்த வாலீஸ் பேட்டை என்கிற பகுதியில் இருவரும் ஒன்றாக அமர்ந்து மது குடித்தனர். அப்போதும், கணேசனிடம் பாவாடை பணத்தை கேட்டார்.
இதில் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, பாவாடை தான் வைத்திருந்த பீர் பாட்டிலை உடைத்து, கணேசனின் கழுத்தில் குத்தினார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். இதுகுறித்து ராமாபுரம் கிராம நிர்வாக அலுவலர் ஜான்போஸ்கோ கொடுத்த புகாரின் பேரில் ஸ்ரீமுஷ்ணம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும் இது தொடர்பான வழக்கு விசாரணை, விருத்தாசலம் 3-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிபதி இளவரசன் தீர்ப்பு அளித்தார். அதில், குற்றம்சாட்டப்பட்ட பாவாடைக்கு ஆயுள் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார். இந்த வழக்கில் அரசு வக்கீல் விஜயகுமார் ஆஜராகி வாதாடினார்.