தலைமை ஆசிரியர் பணியிட மாற்றத்தை கண்டித்து பள்ளிக்கு பூட்டு போட்டு ஆர்ப்பாட்டம் மாணவி மயங்கி விழுந்ததால் பரபரப்பு
தலைமை ஆசிரியர் பணியிட மாற்றத்தை கண்டித்து மாணவர்கள், பெற்றோர்கள் பள்ளிக்கு பூட்டு போட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாணவி மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.;
கலசபாக்கம்,
துரிஞ்சாபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கார்கோணம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை உள்ளது. இதில் 60-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆசிரியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் பள்ளியின் தலைமை ஆசிரியர் அன்பழகன் கலந்துகொண்டார். இதனையடுத்து பள்ளிக்கல்வித்துறை அவரை வேறு பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டது. இதை அறிந்த பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் முன்னாள் மாணவர்கள் தங்கள் பெற்றோர்களுடன் இணைந்து பள்ளிக்கு பூட்டு போட்டு பள்ளியின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது மாணவி ஒருவர் திடீரென மயங்கி விழுந்தார். பின்னர் அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருவண்ணாமலை கல்வி மாவட்ட அலுவலர் அருள்செல்வம், பள்ளிகள் துணை ஆய்வாளர் குமார் மற்றும் அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர்கள் பள்ளியின் பூட்டை திறந்து ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.