ராசிபுரம் அருகே பத்ரகாளியம்மன் கோவில் திருவிழா திரளான பக்தர்கள் தரிசனம்
ராசிபுரம் அருகே பத்ரகாளியம்மன் கோவில் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ராசிபுரம்,
ராசிபுரம் அருகேயுள்ள மேட்டுக்காட்டில் பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தை மாதம் பொங்கல் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. வழக்கம்போல் இந்த ஆண்டும் விழா நடந்தது. விழாவையொட்டி கடந்த 5-ந் தேதி பால்குடம் ஊர்வலம், அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
நேற்று காலையில் பெண்கள் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். இதனைத் தொடர்ந்து மதியம் அலகு குத்துதல் மற்றும் கரகம் எடுத்தல் நிகழ்ச்சி நடந்தது. அதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். மாலையில் தீ மிதி விழா நடந்தது. இதிலும் ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடனை செலுத்தினார்கள்.
மாலையில் எருமைக்கிடா பலியிடும் நிகழ்ச்சியும் நடந்தது. இதற்காக கோவில் முன்பு 10 அடி ஆளமுள்ள குழி வெட்டப்பட்டு இருந்தது. மாலை 6 மணியளவில் கோவிலுக்கு நேர்ந்து விடப்பட்ட எருமைக்கிடாவை பலியிட்டு குழியில் போட்டு மூடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியை பார்ப்பதற்காக மேட்டுக்காடு, ராசிபுரம், பட்டணம் மற்றும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், கோவில் முன்பு திரண்டனர். தொடர்ந்து நாட்டிய நிகழ்ச்சி நடந்தது.
இன்று (வியாழக்கிழமை) இரவு புஷ்ப அலங்காரத்தில் அம்மன் திருவீதி உலா நடக்கிறது. நாளை (வெள்ளிக்கிழமை) காலையில் தேதி மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.விழாவிற்கான ஏற்பாடுகளை தர்மகர்த்தாக்கள் வக்கீல் நாகராஜன், குணசேகரன், குப்புசாமி, மாதவன், ஜனார்த்தனன், ராஜகணபதி மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.