பொள்ளாச்சியில் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ஆலோசனை

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து பொள்ளாச்சியில் நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ஆலோசனை நடத்தினார்.;

Update:2019-02-07 04:30 IST
பொள்ளாச்சி, 

மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் பொள்ளாச்சியில் உள்ள கட்சி அலுவலகத்தில் கடந்த 2 நாட்களாக மேற்கு மண்டலத்திற்கு உட்பட்ட நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட மாவட்ட, தொகுதி, பகுதி பொறுப்பாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கோவை, பொள்ளாச்சி, திருப்பூர், திண்டுக்கல், நீலகிரி ஆகிய நாடாளுமன்ற தொகுதி நிர்வாகிகளுடன் நேற்று முன்தினம் ஆலோசனை நடந்தது.

2-வது நாளான நேற்று ஈரோடு, கரூர், சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெற்றது. இதற்கு கட்சி தலைவர் கமல்ஹாசன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.

மேலும் கட்சி நிர்வாகிகளிடம் யாருடன் கூட்டணி அமைக்கலாம் என்பது குறித்தும், கட்சியை வலுப்படுத்துவது தொடர்பாகவும் 2 நாட்களாக கமல்ஹாசன் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் துணை தலைவர் டாக்டர் மகேந்திரன், பொது செயலாளர் அருணாசலம் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

இந்த நிலையில் நேற்று மாலை 5.30 மணிக்கு பொள்ளாச்சி அருகே உள்ள சிங்காநல்லூரில் தேவர் மகன் படப்பிடிப்பு நடந்த வீட்டிற்கு சென்று பார்வையிட்டார். அதன் பிறகு அங்கிருந்து புறப்பட்டு 6.30 மணிக்கு ஆனைமலை முக்கோணத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அங்கு வந்த கமல்ஹாசனுக்கு கட்சி நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர்.

பின்னர் அவர் திறந்த காரில் நின்று கொண்டு பொதுமக்கள் மத்தியில் பேசும்போது, நாளைய தமிழகத்தை உருவாக்க வேண்டிய பொறுப்பு உங்களுக்கும் உள்ளது. நாளை நமதே, என்றார். அதன்பிறகு பொதுமக்களுக்கு வணக்கம் கூறியவாறு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். நீண்ட நேரம் பேசுவார் என்று எதிர்பார்த்த கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

முன்னதாக ஆனைமலைக்கு வரும் வழியில், பொள்ளாச்சியில் நடந்த விபத்தில் இறந்த அம்பராம்பாளையத்தை சேர்ந்த கட்சி நிர்வாகியும், ஆட்டோ டிரைவருமான கனகராஜ் என்பவரின் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தினருக்கு கமல்ஹாசன் ஆறுதல் கூறினார்.

மேலும் செய்திகள்