எருமாபாளையம் அரசு போக்குவரத்து கழக பணிமனை ரூ.40 லட்சம் வரிபாக்கி குடிநீர் இணைப்பை துண்டிக்க மாநகராட்சி அதிகாரிகள் சென்றதால் பரபரப்பு

எருமாபாளையம் அரசு போக்கு வரத்து கழக பணிமனை மாநகராட்சிக்கு ரூ.40 லட்சம் வரி பாக்கி வைத்துள்ளது. இதையடுத்து அந்த பணி மனையின் குடிநீர் இணைப்பை துண்டிக்க மாநகராட்சி அதிகாரிகள் அங்கு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-02-06 23:00 GMT
சேலம், 

சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள குடியிருப்புகள், வணிக வளாகங்கள் மற்றும் அரசு நிறுவனங்களில் நீண்ட நாட்களாக செலுத்தப்படாத சொத்து வரி மற்றும் குடிநீர் கட்டணம் வசூலிக்கும் பணியில் மாநகராட்சி நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது. இதனிடையே சேலம் அரசு போக்குவரத்து கழக எருமாபாளையம் பணிமனை கடந்த சில ஆண்டுகளாக சுமார் ரூ.40 லட்சம் அளவிற்கு சேலம் மாநகராட்சிக்கு சொத்துவரி மற்றும் குடிநீர் கட்டணம் வரி பாக்கி வைத்துள்ளதாக கூறப்படுகிறது

இந்த வரி பாக்கியை செலுத்த மாநகராட்சி சார்பில் பலமுறை எச்சரிக்கை கொடுத்தும் பணிமனை நிர்வாகத்தின் சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் சேலம் மாநகராட்சி அதிகாரிகள் நேற்று பணிமனைக்கு செல்லும் பிரதான குடிநீர் குழாயை துண்டிக்க முடிவு செய்தனர்.

இதைத்தொடர்ந்து அம்மாபேட்டை மாநகராட்சி மண்டல உதவி ஆணையர் ஜெயராஜ் தலைமையில் அதிகாரிகள் எருமாபாளையத்திற்கு சென்று அங்கு அரசு போக்குவரத்து கழக பணிமனைக்கு செல்லும் குடிநீர் குழாயை அதிரடியாக துண்டிக்க முயற்சித்தனர். இதைப்பார்த்த போக்குவரத்து கழக அதிகாரிகள் விரைந்து வந்து மாநகராட்சி அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

பின்னர் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய ரூ.40 லட்சத்தில், முதற்கட்டமாக ரூ.10 லட்சத்திற்கான காசோலையை வழங்குவதாகவும், மீதமுள்ள தொகை தவணை முறையில் விரைவில் வழங்கப்படும் என்றும் போக்குவரத்து கழக அதிகாரிகள் உறுதியளித்தனர். இதில் சமாதானம் அடைந்த மாநகராட்சி அதிகாரிகள் குடிநீர் இணைப்பை துண்டிக்கும் பணியை தற்காலிகமாக நிறுத்தி விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இதனிடையே ரூ.10 லட்சத்திற்கான காசோலை மாநகராட்சி அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்