வங்கியில் கடன் வாங்கி தருவதாக கூறி பெண்களிடம் நூதன முறையில் ரூ.90 ஆயிரம் மோசடி வாலிபருக்கு வலைவீச்சு

வங்கியில் கடன் வாங்கி தருவதாக கூறி, பெண்களிடம் நூதன முறையில் ரூ.90 ஆயிரத்தை மோசடி செய்த வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2019-02-06 22:00 GMT
கோவில்பட்டி, 

வங்கியில் கடன் வாங்கி தருவதாக கூறி, பெண்களிடம் நூதன முறையில் ரூ.90 ஆயிரத்தை மோசடி செய்த வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

வங்கி கடன் 

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள நகரம், முத்துசாமிபுரம் ஆகிய கிராமங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் சென்றார். அவர் தன்னை குமார் என்றும், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் புதிதாக தொடங்கப்பட உள்ள தனியார் வங்கியில் அலுவலராக உள்ளதாகவும் கூறினார்.

மேலும் அவர், அந்த தனியார் வங்கி சார்பில், மகளிர் சுய உதவிக்குழுவைச் சேர்ந்த பெண்களுக்கு தலா ரூ.1 லட்சம் கடன் வழங்க உள்ளதாகவும், கடனை பெற்ற பின்னர் மாதந்தோறும் தவணைத்தொகையாக ரூ.3,150 வீதம் 40 மாதங்கள் செலுத்த வேண்டும். மத்திய அரசின் திட்டத்தில் வழங்கப்படும் இந்த கடன், நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக தள்ளுபடி செய்ய வாய்ப்பு உள்ளது என்றும் ஆசைவார்த்தை கூறினார்.

ரூ.90 ஆயிரம் மோசடி 

இதனை உண்மை என்று நம்பிய கிராம மக்கள் 50 பேர் நேற்று காலையில் 2 வேன்களில் கோவில்பட்டிக்கு புறப்பட்டு சென்றனர். கோவில்பட்டியை அடுத்த நாலாட்டின்புத்தூர் பகுதியில் வேன்கள் சென்றபோது, அவர்களிடம் குமார் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். பின்னர் அவர்களை வேன்களில் கோவில்பட்டி இளையரசனேந்தல் ரோடு சந்திப்பு காளியம்மன் கோவில் அருகில் அழைத்து சென்று, கடன் விண்ணப்ப படிவத்தில் கையெழுத்து பெற்று, அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை பெற்று கொண்டார்.

பின்னர் அவர்களை வேன்களில் கோவில்பட்டி ரெயில் நிலைய வளாகத்தில் அழைத்து சென்றார். அங்கு முத்துசாமிபுரத்தைச் சேர்ந்த 30 பேரிடம் தலா ரூ.2 ஆயிரமும், நகரம் கிராமத்தைச் சேர்ந்த 20 பேரிடம் தலா ரூ.1,500–ம் குமார் பெற்று கொண்டார். மொத்தம் ரூ.90 ஆயிரத்தை பெற்று கொண்ட அவர் கோவில்பட்டி புது ரோட்டில் உள்ள வங்கியில் சென்று, பணத்தை செலுத்தி வருவதாக கூறினார்.

தப்பி ஓட்டம் 

குமாரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த வேன் டிரைவர்களில் ஒருவரான பசுபதி ராஜ், குமாருடன் மோட்டார் சைக்கிளில் வருவதாக கூறினார். உடனே குமார், பசுபதி ராஜை தனது மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார். கோவில்பட்டி புது ரோடு தனியார் வங்கி முன்பு மோட்டார் சைக்கிளில் சென்ற குமார், அங்கு பசுபதி ராஜை கீழே இறங்கி விட்டார்.

பின்னர் குமார் செல்போனில் பேசியவாறு, திடீரென்று மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் தப்பி சென்றார். உடனே பசுபதி ராஜ், குமாரை பிடிக்க முயன்றார். ஆனாலும் குமார் தெருக்களின் வழியாக மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்று விட்டார்.

போலீசார் விசாரணை 

இதுகுறித்து பசுபதி ராஜ் தனது வேனில் வந்த மகளிர் சுய உதவிக்குழுவினரிடம் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண்கள், கோவில்பட்டி கிழக்கு போலீஸ் நிலையத்தில் சென்று புகார் தெரிவித்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே வேன் டிரைவர் பசுபதி ராஜ் தனது செல்போனில் குமாரையும், அவரது மோட்டார் சைக்கிளையும் புகைப்படம் எடுத்து வைத்து இருந்தார். அதன் மூலம் போலீசார் துப்பு துலக்கி வருகின்றனர். இதுகுறித்து சங்கரன்கோவில் போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளிக்க போலீசார் அறிவுறுத்தினர்.

மேலும் செய்திகள்