விதை விற்பனை உரிமத்துக்கு ஆன்லைனில் தான் விண்ணப்பிக்க முடியும் அதிகாரி தகவல்

புதிதாக விதை விற்பனை உரிமம் பெற வேண்டுவோர் மற்றும் உரிமம் புதுப்பிப்போர் இனி ஆன்லைனில்தான் விண்ணப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.;

Update: 2019-02-06 22:00 GMT

திருவண்ணாமலை,

இதுதொடர்பாக விதை ஆய்வு துணை இயக்குனர் பத்மாவதி (வேலூர்) வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:–

புதிய விதை விற்பனை உரிமம் மற்றும் உரிமம் புதுப்பித்தல் ஆகியவை ஆன்லைன் மயமாக்கப்பட்டு உள்ளது. இனி வரும் காலங்களில் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பம் செய்ய கோவை விதைச் சான்று இயக்குனர் உத்தரவிட்டு உள்ளார். விதை விற்பனையாளர்கள், உற்பத்தியாளர்களுக்கு விதை ஆய்வு நடைமுறை குறித்து ‘ஸ்பெக்ஸ்’ என்னும் மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டு கணினி மயமாக்கப்பட்டு உள்ளது.

விதை விற்பனையாளர்கள், உற்பத்தியாளர்கள் எளிதில் விதை விற்பனை உரிமம் பெற்று பயன்பெற கோவை விதைச் சான்றளிப்பு மற்றும் அங்கக சான்று துறை மூலம் இந்த நடைமுறை உருவாக்கப்பட்டு உள்ளது.

இந்த நடவடிக்கை மூலம் விதை விற்பனை உரிமம் பெறுதல், உரிமம் புதுப்பித்தல், பெயர் மற்றும் முகவரி மாற்றம் செய்தல், விற்பனை நிலைய ஆய்வு, விதை விற்பனை தடை விதித்தல் போன்றவை கணினி மயமாக்கப்பட்டு உள்ளது. இந்த மென்பொருள் மூலம் விதை விற்பனையாளர்களுக்கு துரிதமாக உரிமம் வழங்கிட வழிவகை செய்யப்பட்டு உள்ளது.

ஆன்லைனில் விண்ணப்பிப்போர் தங்களது கைபேசி எண், இ–மெயில், ஆதார் எண் போன்ற அடிப்படை விவரங்களை கொண்டு விண்ணப்பித்து கூடுதலாக இது தொடர்பான ஆவணங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்து, வேலூரில் உள்ள விதை ஆய்வு துணை இயக்குனர் அலுவலகத்திற்கு அனுப்பிட அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

மேலும் விவரங்களுக்கு திருவண்ணாமலை மற்றும் ஆரணி பகுதியில் உள்ள விதை ஆய்வாளர்களை அணுகலாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்