வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த சிறப்பு முகாமில் 207 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த சிறப்பு முகாமில் 207 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டன.

Update: 2019-02-06 22:00 GMT
வேலூர்,

வேலூர் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் ஒவ்வொரு மாதமும் முதல் செவ்வாய்க்கிழமையன்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்து வருகிறது. அதன்படி இந்த மாதத்துக்கான சிறப்பு முகாமுக்கு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இளநிலை மறுவாழ்வு அலுவலர் மலர்விழி தலைமை தாங்கினார். முடநீக்கியல் தொழில்நுட்பவியலாளர் ஜோதிலிங்கம் முன்னிலை வகித்தார். இதில், வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 300–க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டனர்.

அவர்களை கண், காது, எலும்பு, மனநலம் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த டாக்டர்கள் டேவிட் விமல்குமார், வெங்கடேசன், சித்ரா, சவுமியா, தன்வீர் அகமது, செந்தில்குமார், மோகன் ஆகியோர் கலந்துகொண்டு பரிசோதனை செய்தனர்.

அதில் தகுதியுடைய 207 மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரே நாளில் தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. மேலும் விண்ணப்பித்த சிலருக்கு மாற்றுத்திறனாளிகளின் ஊனத்தின் தன்மை குறித்துக் கண்டறிவதில் சந்தேகம் ஏற்பட்டது. அவர்கள் அனைவரும் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அங்கு எக்ஸ்–ரே, ஸ்கேன் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் மூலம் மாற்றுத்திறனாளிகளின் ஊனத்தின் தன்மை கண்டறியப்படும். 40 சதவீதத்துக்கு மேல் ஊனத்தின் தன்மை காணப்பட்டால் அவர்களுக்கு வரும் செப்டம்பர் மாதம் நடைபெறும் சிறப்பு முகாமில் அடையாள அட்டை வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

முன்னதாக மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டன.

மேலும் செய்திகள்