தூத்துக்குடியில் சாலை விபத்துக்களை தடுக்க வாகன ஓட்டிகள் ஒத்துழைக்க வேண்டும் போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா பேச்சு

தூத்துக்குடியில் சாலை விபத்துக்களை தடுக்க வாகன ஓட்டிகள் ஒத்துழைக்க வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா கூறினார்.

Update: 2019-02-06 22:30 GMT

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் சாலை விபத்துக்களை தடுக்க வாகன ஓட்டிகள் ஒத்துழைக்க வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா கூறினார்.

கண்பரிசோதனை முகாம்

தூத்துக்குடி நகர போலீஸ் சார்பில் சாலை பாதுகாப்பு வாரவிழாவையொட்டி இலவச கண் பரிசோதனை முகாம் மற்றும் நீரிழிவு நோய் பரிசோதனை முகாம் தூத்துக்குடி குரூஸ்பர்னாந்து சிலை அருகே நேற்று நடந்தது. முகாமை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா தலைமை தாங்கி தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:–

விபத்து

ஒவ்வொரு வருடமும் சாலை விபத்துக்களை குறைக்க வேண்டும். அதுவே நமது லட்சியமாக இருக்க வேண்டும். 2017 மற்றும் 2018–ம் ஆண்டுகளில் 20 சதவீதம் விபத்துக்களை குறைத்து உள்ளோம். இன்னும் குறைக்க வேண்டும். அதற்கு வாகன ஓட்டிகள் சாலை போக்குவரத்து விதிகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.

தூத்துக்குடியில் இந்திய உணவுக்கழக குடோனில் இருந்து பீச் ரோடு வரை உள்ள சாலையும், வி.இ. ரோடு ஆகியவைதான் பிரதான சாலையாக உள்ளது. இந்த சாலையில்தான் கடைகள், பள்ளிக்கூடங்கள் மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி ஆகும். இங்கு வாகனம் ஓட்டும் போது, அதிவேகமாக ஓட்டாமல், மிதமான வேகத்தில் செல்ல வேண்டும். வாகனங்களை, அதற்கென ஒதுக்கப்பட்ட இடங்களில்தான் நிறுத்த வேண்டும். விபத்துக்களை தவிர்ப்பதற்கு வாகன ஓட்டிகள் முழு ஒத்துழைப்பு கொடுத்தால்தான் சாலை விபத்துக்களை குறைக்க முடியுமே தவிர, போலீசாரால் மட்டும் சாலை விபத்துக்களை குறைக்க முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து ஆட்டோ ஓட்டுனர்கள், பஸ், லாரி ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இலவசமாக கண், நீரிழிவு நோய் பரிசோதனை செய்யப்பட்டது.

விழிப்புணர்வு பேரணி

முகாமில் தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ், இன்ஸ்பெக்டர்கள் முத்து(தென்பாகம்), ரேனியஸ் ஜேசுபாதம் (மத்தியபாகம்), சிசில் (போக்குவரத்து), போக்குவரத்து பிரிவு சப்–இன்ஸ்பெக்டர் மயிலேறும்பெருமாள் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

முன்னதாக தூத்துக்குடி பீச் ரோட்டில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா தொடங்கி வைத்தார். பேரணி பீச் ரோட்டில் தனியார் மில் அருகே இருந்து தொடங்கி பனிமயமாதா ஆலயம் வரை சென்று மீண்டும் மில் முன்பு முடிவடைந்தது.

பேரணியில் இன்ஸ்பெக்டர்கள் சிவசெந்தில்குமார், ஜென்சி, கோகிலா, கோமதி, தனியார் நிறுவன பொதுமேலாளர் சீனுரங்கநாதன், மேலாளர் சிதம்பரம், உதவி மேலாளர் தணிகைநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்