நிக்ஸ் மினி கலர் சென்சார்
வீடு கட்டியவர்களுக்கு பெயிண்ட் அடிப்பதில் மிகப் பெரும் சவால் நிச்சயம் ஏற்பட்டிருக்கும். பல லட்சங்களை செலவிட்டு தங்களது கனவு இல்லத்தை கட்டியவர்கள் அதற்கு வண்ணம் தீட்டி மகிழத்தான் விரும்புவர்.
தங்களின் எண்ணத்தை வெளிப்படுத்தும் வகையில் வண்ணங்களை ஒவ்வொரு அறைக்கும் அடிக்கலாம் என்று நினைத்தாலும், பெயிண்டர்களின் கற்பனை வறட்சி காரணமாக சரி நமக்கு வாய்த்தது இவ்வளவுதான் என பெரும்பாலான சொந்த வீட்டு உரிமையாளர்கள் சமாதானமாக வாழத்தான் விரும்புகின்றனர்.
எந்த வண்ணம் நன்றாக இருக்கும் என்பதோடு அது எங்கு கிடைக்கும் என்ற விவரத்தையும் உங்கள் ஸ்மார்ட்போனில் தந்தால் எப்படியிருக்கும். அதைத்தான் நிக்ஸ் மினி கலர் சென்சார் தருகிறது. பார்ப்பதற்கு அழகிய தோற்றத்துடன் கையடக்கமாக வடிவமைக்கப்பட்ட இந்த உணர் கருவி எந்த தரைக்கு எந்த வித பெயிண்ட் சரியாக இருக்கும் என்பதை உங்களுக்கு சுட்டிக்காட்டும். ஏறக்குறைய 31 ஆயிரம் பெயிண்ட் பிராண்ட்களை இது அடையாளம் காட்டும். மிகவும் துல்லியமான கலர் கலவையை இது உணர்த்தும்.
எந்த மாதிரியான வெளிச்சத்தில் எந்த வண்ணம் சிறப்பாக இருக்கும் என்பது மட்டுமின்றி எந்த பெயிண்டிற்கு எந்த மாதிரி அளவிலான வெளிச்சம் சிறப்பாக இருக்கும் என்பதையும் இது சுட்டிக் காட்டும். வயர்லெஸ் மூலம் செயல்படக் கூடியது.
புளூடூத் 4.0 இணைப்பில் இதை செயல்படுத்தலாம். நிக்ஸ் பெயிண்ட் மற்றும் நிக்ஸ் டிஜிட்டல் ஆப் ஆகியன ஐ.ஓ.எஸ். மற்றும் ஆண்ட்ராய்டு இயங்கு தளங்களில் செயல்படக் கூடியது. எடைகுறைவான இந்த சாதனத்தை உங்கள் சாவிக் கொத்தில் எடுத்துச் செல்ல முடியும். யு பை இணையதளத்தில் இது கிடைக்கிறது. விலை ரூ.8,603 ஆகும். நிக்ஸ் மினி கலர் இருந்தால் உங்கள் எண்ணங்களை வண்ணங்களில் வடிக்கலாமே.