டாடா நானோவுக்கு டாட்டா

உலகின் மிகக் குறைந்த விலை கார் என மிகவும் பரபரப்பாகவும் எதிர்பார்ப்புடனும் அறிமுகமான டாடா மோட்டார்ஸின் நானோ கார் தனது இறுதி நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறது. ஆம் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் நானோ உற்பத்தியை நிறுத்தப் போவதாக அந்நிறுவனம் அறிவித்துவிட்டது.

Update: 2019-02-06 07:03 GMT
இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து சந்தைக்கு வரும் அனைத்து புதிய கார்களிலும் ஏ.பி.எஸ். வசதி இருக்க வேண்டியது கட்டாயம். மேலும் கார்களுக்கான புதிய பாதுகாப்பு விதிகளை நானோ காரில் புகுத்த அதிகம் செலவாகும். காரின் விலையையும் உயர்த்த வேண்டியிருக்கும்.

இந்த கார் அறிமுகப்படுத்தும்போது ரூ.1 லட்சம் விலையில் விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் அந்த விலைக்கு சிலருக்குத்தான் தர முடிந்தது. பின்னர் படிப்படியாக இந்தக் காரின் விலை உயர்த்தப்பட்டது. மொத்தம் 6 வேரியன்ட்களில் இது தயாரிக்கப்படுகிறது. தற்போது பேஸ்மாடல் விலையே ரூ.2.12 லட்சமாக உள்ளது. ஆட்டோமேடிக் கியர் டிரான்ஸ்மிஷன் உள்ள காரின் விலை ரூ.3.23 லட்சம் ஆகும். பெட்ரோல் மாடலின் அடிப்படை விலை ரூ.2.48 லட்சத்தில் ஆரம்பமாகிறது.

ஆரம்பத்தில் நானோ காருக்கு இருந்த வரவேற்பு படிப்படியாகக் குறைந்தது. அதன் செயல்பாடுகள் வாடிக்கையாளர்களுக்கு திருப்திகரமாக இல்லை. அத்துடன் விலையும் தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருந்தது. இதனால் மலிவு விலைக் காராயிருந்த நானோ, மற்ற நிறுவனங்களின் சிறிய மாடல் கார்களுக்கு (மாருதி ஆல்டோ, ஹூண்டாய் சான்ட்ரோ) நிகரான விலையை எட்டியது. மற்ற கார்களின் செயல்திறனுடன் ஒப்பிடுகையில் நானோ பின்தங்கியது. மேலும் இட வசதியும் போதுமானதாக இல்லை.

இதனாலேயே ஆண்டுக்காண்டு நானோ விற்பனை சரிந்தது. அடுத்த தலைமுறை காரை உருவாக்க 2014-ல் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு கூடுதலாக ரூ.400 கோடியை இந்நிறுவனம் முதலீடு செய்தது. ஆனாலும் கார் விற்பனையின் சரிவை தடுக்க முடியவில்லை.

இந்த கார் உற்பத்தியால் தொடர்ந்து இந்நிறுவனத்துக்கு இழப்புதான் ஏற்பட்டது. இருப்பினும் ரத்தன் டாடாவின் கனவு கார் திட்டம் என்பதால் எவரும் இது குறித்து கருத்து தெரிவிக்காமல் அல்லது உற்பத்தியை நிறுத்துவது குறித்து ஆலோசனை கூறாமல் இருந்தனர்.

ஆனால் எவ்வளவுதான் காப்பாற்றினாலும், வலிமை உள்ளதுதான் எஞ்சும் என்பதற்கேற்ப டாடா நானோவுக்கான இறுதி நாட்கள் வந்துவிட்டன. கார்களுக்கான மோதல் சோதனை (கிராஷ் டெஸ்ட்) முடிவுகளில் நானோ பங்கேற்க முடியாது.

இதனால் பாதுகாப்பற்ற காரை தொடர்ந்து உற்பத்தி செய்ய விதிமுறைகள் அனுமதிக்காது இதனாலேயே மார்ச் மாதத்துடன் இக்கார் உற்பத்தியை நிறுத்திவிடப் போவதாக இந்நிறுவனம் அறிவித்துவிட்டது.

ரத்தன் டாடாவுக்கு நானோ கார் உற்பத்தி நிறுத்தம் வருத்தம் தரும் விஷயம்தான். கனவு திட்டம் என்பதால் எவ்வளவு நாளைக்குத்தான் அதைக் காப்பாற்ற முடியும்.

குட்பை நானோ!

மேலும் செய்திகள்