டுகாடி பேட்டரி மோட்டார் சைக்கிள்
பல்வேறு வாகன தயாரிப்பு நிறுவனங்கள் பேட்டரி வாகனங்கள் பக்கம் தங்களது கவனத்தைத் திருப்பியுள்ளன. அந்த வரிசையில் புதிதாக சேர்ந்துள்ளது டுகாடி. ரேஸ் பைக்குகளை மட்டுமே தயாரித்து இளைஞர்களை கவர்ந்த இந்நிறுவனம் பேட்டரி வாகனங்களையும் தயாரிக்கப் போவதாக அறிவித்துள்ளது.
எதிர்காலமே இனி பேட்டரி வாகனங்களுக்குத்தான் என்று டுகாடி நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி கிளாடியோ டொமெனிகாலி தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே 2017-ம் ஆண்டு நிறுவனத்தின் மேற்கு ஐரோப்பிய நாடுகளின் நிர்வாக இயக்குநர் எட்வர்டு லோதே, தங்கள் நிறுவனம் பேட்டரியில் ஓடும் மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர்களைத் தயாரிக்கப் போவதாக அறிவித்திருந்தது.
மிலான் பாலிடெக்னிக் பள்ளியுடன் இணைந்து பேட்டரி வாகனங்களைத் தயாரிக்கப் போவதாக அறிவித்திருந்தது. இதற்காக பவர் டிரைன் உருவாக்கப்பட்டு பேட்டரி வாகன உருவாக்கத்தில் தீவிரம் காட்டியது. அதன் பிறகு பல்வேறு காரணங்களால் நிறுவனம் இதில் போதிய கவனம் செலுத்தவில்லை. தற்போது இந்நிறுவனம் பேட்டரி வாகனம் தயாரிக்கும் எனர்ஜிகா நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது.
இதனால் விரைவிலேயே டுகாடி பேட்டரி வாகனம் சந்தைக்கு வரும் என்று எதிர்பார்க்கலாம்.