கடற்கரையில் பிச்சைக்காரர்களை அனுமதிக்கக்கூடாது கவர்னர் கிரண்பெடி உத்தரவு

புதுவை கடற்கரையில் பிச்சைக்காரர்களை அனுமதிக்கக்கூடாது என்று கவர்னர் கிரண்பெடி உத்தரவிட்டுள்ளார்.;

Update: 2019-02-06 00:11 GMT
புதுச்சேரி,

புதுவை அரசுத்துறைகளில் ஆய்வு நடத்தி வரும் கவர்னர் கிரண்பெடி நேற்று சுற்றுலாத்துறையில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சுற்றுலா திட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் தொடர்பாக இயக்குனர் முகமது மன்சூர் அவரிடம் விளக்கினார். மத்திய அரசின் உதவி யுடன் செயல்படுத்தப்பட்டு வரும் மேம்பாட்டு பணிகளையும் விளக்கினார்.

புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் இருந்து சுற்றுலா மேம்பாட்டு பணிகள் தொடர்பான கருத்துகளை கேட்கவும், அவ்வாறு வழங்கப்படும் நல்ல ஆலோசனைகளை செயல்படுத்தவும் அறிவுறுத்தினார். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத சுற்றுலா திட்டங்களை செயல்படுத்தவும், குறிப்பாக வனப்பகுதியில் (வனத்துறை அலுவலக பகுதியில்) வனத்துறையுடன் இணைந்து செயல்படுத்தவும் கேட்டுக்கொண்டார்.

கடற்கரை பகுதிகளை சுத்தமாக வைத்திருக்க சூரியசக்தி, பேட்டரி மூலம் இயங்கும் வாகனங்களை இயக்கிடவும், காவல்துறை, நகராட்சி இணைந்து மக்கள் அதிகம் கூடும் நேரங்களில் பிச்சைக் காரர்கள், தெருவோர வியாபாரிகள் தொல்லையை தடுக்க நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தினார்.

சுற்றுலா பயணிகளின் வசதிக்காவும், கடற்கரை பகுதியை சுத்தமாக வைத்திருக்கவும் நடமாடும் கழிப்பிடங்கள் அமைக்கவும், வெளிப்புறத்திலிருந்து சுற்றுலா தலங்களுக்கு சுற்றுலா வருபவர்கள் எளிதில் வந்து சேரும் விதமாக வழி முறைகளை கண்டறியுமாறும் அறிவுறுத்தினார்.

மேலும் செய்திகள்