தர்மபுரி-மொரப்பூர் இடையே புதிய ரெயில் பாதை, மத்திய ரெயில்வே மந்திரி அடிக்கல் நாட்டுகிறார்
தர்மபுரி-மொரப்பூர் இடையே ரெயில்பாதை இணைப்பு திட்டத்தை மத்திய ரெயில்வே மந்திரி அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறார் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. தெரிவித்தார். தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தர்மபுரி ரெயில் நிலையத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தர்மபுரி,
தர்மபுரி - மொரப்பூர் இடையே 36 கிலோ மீட்டர் தொலைவுக்கு புதிய ரெயில்பாதை அமைக்க மத்திய ரெயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. ரூ.358.95 கோடி மதிப்பில் இந்த திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது. இது மிகவும் மகிழ்ச்சியான செய்தி. இதன் மூலம் தர்மபுரி மாவட்டத்தில் புதிய வரலாறு படைக்கப்பட்டு உள்ளது. தர்மபுரி மாவட்ட மக்களின் 78 ஆண்டு கனவு நிறைவேறியிருக்கிறது.
முதலில் இந்த திட்டச் செலவை பகிர்ந்து கொள்ள முடியாது என்று தமிழக அரசு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 6-ந் தேதி மறுத்துவிட்ட நிலையில், கடந்த ஜனவரி மாதம் இத்திட்டத்திற்கு மத்திய ரெயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த தகவலை ரெயில்வே மந்திரி பியுஷ் கோயல் கடந்த 4-ந்தேதி எனக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
முழுமையாக மத்திய அரசு நிதியில் இந்த ரெயில்பாதை இணைப்பு திட்டம் நிறை வேற்றப்படும். இத்திட்டத்திற்கு இன்னும் 10 நாட்களில் அடிக்கல் நாட்டுவிழா நடத்தப்படும். அதில் மத்திய ரெயில்வே மந்திரி பங்கேற்று அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறார். இந்த திட்டம் மூலம் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் தர்மபுரியில் இருந்து நேரடியாக சென்னைக்கு ரெயிலில் பயணிக்க முடியும். இதன்மூலம் நாடாளுமன்ற தேர்தலில் நான் வழங்கிய வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது.
பா.ம.க. நடத்திய போராட்டங்களால் தர்மபுரி மாவட்டத்திற்கு பல்வேறு நன்மைகள் கிடைத்து உள்ளன. ஒகேனக்கல் உபரிநீரை தர்மபுரி மாவட்ட ஏரிகளில் நிரப்பும் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி 10 லட்சத்து 20 ஆயிரம் பேரிடம் கையெழுத்து வாங்கி உள்ளோம். இதை விரைவில் முதல்-அமைச்சரிடம் நேரில் வழங்கி கோரிக்கையை வலியுறுத்துவோம்.
நாடாளுமன்ற தேர்தலில் பா.ம.க. கூட்டணி அமைப்பது குறித்து அதிகாரபூர்வமான தகவல்கள் ஏதும் வெளியிடப்படாத நிலையில் பல்வேறு தவறான கருத்துக்கள் பரப்பப்படுகிறது. இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
இவ்வாறு டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பேட்டியின்போது கூறினார்.
இதைத்தொடர்ந்து தர்மபுரி-மொரப்பூர் ரெயில்பாதை இணைப்பு திட்டத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்ததை வரவேற்று தர்மபுரி பஸ்நிலையத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பொதுமக்கள், பயணிகளுக்கு இனிப்பு வழங்கினார்.
அப்போது முன்னாள் எம்.பி.டாக்டர் செந்தில், பா.ம.க. மாநில துணை பொதுச்செயலாளர் வெங்கடேஸ்வரன்,மாநில துணைத்தலைவர்கள் பாடிசெல்வம், சாந்தமூர்த்தி, முன்னாள் எம்.எல்.ஏ. பாரிமோகன், மாவட்ட செயலாளர் சண்முகம், உழவர் பேரியக்க மாநில செயலாளர் வேலுசாமி, வன்னியர் சங்க மாநில நிர்வாகி அரசாங்கம், மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணன் உள்பட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.