ஓடும் ரெயிலில் சாகசம் செய்த சிறுவனின் கை துண்டானது : ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
ஓடும் ரெயிலில் சாகசம் புரிந்த சிறுவனின் கை துண்டாகி சிக்னல் மின்கம்பத்தில் தொங்கியது. சிறுவனுக்கு சயான் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மும்பை,
மும்பை துறைமுக வழித்தடத்தில் நேற்று முன்தினம் சி.எஸ்.எம்.டி.யில் இருந்து வாஷி நோக்கி மின்சார ரெயில் சென்று கொண்டிருந்தது. இந்த ரெயிலில் வாசலில் நின்று கொண்டிருந்த 17 வயது சிறுவன் தண்டவாளம் அருகே உள்ள சிக்னல் மின்கம்பத்தை தொட்டு சாகசம் செய்தபடி வந்தான்.
இதனைக்கண்ட அந்த பெட்டியில் இருந்த பயணிகள் சிறுவனை சத்தம் போட்டனர். எனினும் அவன் கேட்காமல் வாசற்படியில் நின்றபடி சாகசம் செய்து கொண்டு வந்தான்.
இதில், வடலா- ஜி.டி.பி.நகர் இடையே ரெயில் வந்தபோது சாகசத்தில் ஈடுபட்டு கொண்டு இருந்த சிறுவனின் வலது கை தண்டவாளம் அருகே உள்ள கம்பத்தில் சிக்கியது. இதனால் ஓடும் ரெயிலில் இருந்து சிறுவன் கீழே விழுந்தான். ஆனால் அவனது கை துண்டாகி சிக்னல் மின்கம்பத்தில் தொங்கி கொண்டிருந்தது.
இதுபற்றி தகவல் அறிந்த வடலா ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கை துண்டாகி கிடந்த சிறுவனை மீட்டு சயான் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.